தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சௌகார் ஜானகி. பழம்பெரும் நடிகையான அவர் வயது மூப்பின் காரணமாக 94 வயதான நிலையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார் நாசர் சத்யராஜ் நிழல்கள் ரவி ஷாலினி அஜீத்குமார் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை செளகார் ஜானகி கூறியதாவது, சினிமா பைத்தியம் என்ற படத்தில் என் தம்பியாக கமல்ஹாசன் நடித்தார். அவரது ஹேராம் படத்தில் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நான் நடித்தேன். நான் நடித்த எல்லா காட்சிகளுமே நீக்கப்பட்டு இருந்தன. ஒரேயொரு காட்சியில் முகம் கூட சரியாகத் தெரியாமல் நான் வருவேன்.
அதைப் பார்த்து கமல் மேல் எனக்கு கோபம் வந்தது. 1992ம் ஆண்டில் செப்டம்பரில் இதய அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது, ஹேராம் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த மொத்த தொகையையும், கமலின் மேனேஜர் கொண்டு வந்து கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தது அந்தப் பணம் என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் புதிய பறவை படத்தில், நான் ஏற்று நடித்த வேடம் வில்லி வகையானது. அந்த படத்தையும் அந்த வேடத்தையும் ரசிகர்கள் நன்றாக ரசித்தனரே தவிர விமர்சிக்கவில்லை. அது போன்ற வேடங்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் அதிகமாக விரும்பிய நட்சத்திரங்கள் மார்லின் மன்ட்ரோ சோபியா லாரன்ஸ் இன்க்ரிட் பெர்க்மென் மற்றும் லிவின்லி போன்றவர்கள்.
இவர்களது வாழ்க்கை அனுபவங்கள் என்னை மிகவும் கவர்ந்தன என்று கூறலாம். எனக்கு இன்னொருவரை இமிட்டெட் செய்து நடிப்பதில் நம்பிக்கை கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிறவர்கள் அவர்களது பழகும் முறைகள் நடவடிக்கைகள் இவற்றை கவனித்தால் சில சமயங்களில் சில வேடங்களை ஏற்று நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அது ஓரளவுக்கு உதவியாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருக்கும்.
உதாரணமாக தில்லுமுல்லு படத்தில் நான் ஏற்ற வேடம். அதேபோன்ற ஒரு நபரை மனதில் வைத்து நடித்தது தான். அதற்காக நிறைய பாராட்டு பெற்றேன் என்றும் அந்த நேர்காணலில் நடிகை சௌகார் ஜானகி கூறியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு அம்மாவாக, தேங்காய் சீனிவாசனை ஏமாற்றும் கேரக்டரில் அவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





