தமிழ் சினிமாவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி டயலாக் பேசி நடிக்கும் ஒரே நடிகர் மேஜர் ஆர் சுந்தர்ராஜன். கம்பீரமான ஒரு நடிகர். பல படங்களில் வில்லனாக நடித்தவர். அதே போல் அப்பா அண்ணன் போன்ற குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.
இளம் வயதிலேயே அதிகமான படங்களில் அப்பா வேடங்களில் நடித்த அன்றைய நடிகர்களின் மேஜர் ஆர் சுந்தர்ராஜனும் ஒருவர். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலைஞராக இருந்தனர்.
பழம்பெரும் நடிகர் மேஜர் ஆர் சுந்தர்ராஜன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, எனக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு சம்பவம் நடந்தது. காதல் வாகனம் என்று நினைக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த அந்த படத்தில் நான் எம்ஜிஆருக்கு தந்தையாக நடித்தேன்.
எம்ஜிஆரை போலீஸ் கைது செய்து அழைத்து செல்வது போல் ஒரு காட்சி. அதற்கான ஒத்திகை எல்லாம் பார்த்தாகி விட்டது. அப்போது காட்சியை படமாக்கினோம். அப்போது டேக்கில் திடீரென எம்ஜிஆர் என் காலை தொட்டு கும்பிட்டு விட்டார். அப்பாவின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு எம்ஜிஆர் கைது செய்யப்பட்டு போவதாக அந்த காட்சி இருந்தது.
இதை நான் எதிர்பார்க்காமல் எம்ஜிஆர் காலில் விழுந்து விட்டாரே என அதிர்ச்சியில் சற்று பின்னடைந்து சென்றுவிட்டேன். அதன்பிறகு எம்ஜிஆர் சிரித்தபடி என்னிடம் சொன்னார். நடிகன் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நான் நடிக்கும் போது திடீரென அப்படி செய்தால் நீ அதை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒரு மகன் தன் தகப்பனின் காலில் விழுந்து கும்பிடுவது தவறில்லையே? நீ ஏன் உன்னை சுந்தர்ராஜனாகவும் என்னை எம்ஜிஆராகவும் நினைக்கிறாய்? என்று சொன்னார் என்று அந்த நேர்காணலில் நடிகர் மேஜர் ஆர் சுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.





