தமிழக முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிட்டதாக சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக முதல்வர் விஜயை விமர்சித்து பதிவு ஒன்று செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பதவி வெறியும் உதயநிதி மேல் பொறாமையும் மட்டுமே இவரை அரசியலுக்கு நகர்த்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பேச்சுகளில் அதை வெட்ட வெளிச்சமாக காட்டினார். மக்கள் சேவையோ பொதுநல அக்கறையோ இன்றி அதிகார அரசியலுக்கு ஆசைப்பட்டு வந்தவர் இவர். முதல் முதலில் ஒரு களத்துக்கு சென்று ஒரு பிரச்சனையில் தலையிட்டு தன்னை காட்டிக் கொண்டார் என்றால் அது பரந்தூர் விஷயம்தான். அதற்கு பிறகு எங்கும் எதிலும் கலந்து கொண்டதில்லை.
அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றாலும் அவருடைய ஆலோசகர்கள் அவருக்கு வழக்கம் போல கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அழைத்துச் சென்றதை கண்டோம். அந்த விஷயத்தில் தான் வென்றதாக காட்டுவதற்காக தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த திட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்.
இது அதிமுக தொடங்கிய திட்டம்; பின்பு திமுக ஆட்சியில் விரிவான ஆய்வுகள் மேலும் நடத்தப்பட்டு ஒன்றிய அரசால் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நீண்டகால அரசாங்க தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் ஆலோசனைகளுக்கு பிறகு எல்லோராலும் ஏற்கப்பட்ட திட்டம். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நீர் நிலைகள் பாதிக்கப்படும். அதனால் இதனை ரத்து செய்கிறேன் என்று சொல்கிறார்.
இந்த ராவ் தொழில்நுட்ப விஞ்ஞானி நியாயப்படி என்ன செய்ய வேண்டும்? நிலங்களை அந்த விவசாயிகளிடம் திரும்ப கொடுத்து விவசாயத்தை தொடரச் செய்ய வேண்டும் அல்லவா? அதுதானே உங்கள் கவலை. ஆனால் அதைச் செய்யாமல் அதே இடத்தில் வேறு தொழிற்சாலைகள் அமைப்போம். பிற தொழில்களை தொடங்குவோம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டை பகடைக்காய் ஆக்குகிறார். அதை கைதட்டி ரசிக்கிறது அறிவுக் குருட்டு கூட்டம்.
சில ஆண்டுகள் பின்னோக்கி போய் பாருங்கள். அதிகாரம் மமதையில் ஆணவத்தில் திமிரில் அழகாக கட்டப்பட்ட ஒரு அருமையான புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றி தன் அகங்காரத்தை ஆற்றிக்கொண்டார். பின் ஆதரவுக்கு ஆளில்லாமல் தன்னந்தனியாக ஆறடி குழியில் இறக்கப்பட்டார். வாழ்க்கை ஒரு கொடூரமான அறமன்றம். மனச்சாட்சியுடன் நடந்தால் வாழ்த்தும். இல்லையேல் வீழ்த்தும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த பதிவில் ஆவேசமாக கூறியிருக்கிறார்





