“சந்திரமுகி” திரைப்படம் எந்தளவுக்கு மாபெரும் வெற்றிபெற்றது என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்ததே. 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படம் இது. “சந்திரமுகி” திரைப்படம் வெளிவந்த சமயத்தில் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடியிருக்கிறது. அந்தளவுக்கு சாதனை படைத்த திரைப்படமாக அமைந்துள்ளது.
“சந்திரமுகி” திரைப்படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் இயக்குனர் பி.வாசு. “சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் சந்திரமுகியாக வருகிறார்.
மேலும் இவர்களுடன் வடிவேலு, ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. “RRR” திரைப்படத்திற்காக ஆஸ்கர் வாங்கிய கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவர உள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ராகவா லாரன்ஸிடம் நான் முதலில் சொன்ன விஷயம் ரஜினி சாரை மறந்துவிடுங்கள் என்பதுதான். அவர் வேற நீங்க வேற என்றுதான் சொன்னேன். ராகவா லாரன்ஸிடம் ரஜினிகாந்த் வராமல் இருப்பதை பார்த்துக்கொள்வதே பெரிய வேலையாக இருந்தது.
ராகவா லாரன்ஸ் மாதிரியான ஒரு ரஜினிகாந்தின் பக்தனை நான் பார்த்ததே இல்லை என்று கூட சொல்லாம். அப்படி இருக்கும்போது அவரிடம் இந்த கதாபாத்திரம் போனால் அவர் எந்த மாதிரி யோசிப்பார் என்று தெரியும். ஆனாலும் ராகவா லாரன்ஸ் ரஜினியிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்ட நன்றாகவே உழைத்திருக்கிறார். ரஜினிகாந்தை இவருடன் ஒப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.
அப்போது பேட்டி எடுத்த நிருபர், “ஜோதிகா மேடம் கேரக்டரை கங்கனா செய்கிறாரே” என்று பேச வரும்போது இடையில் தடுத்த பி.வாசு, “ஜோதிகா மேடம் கேரக்டரை கங்கனா செய்கிறார் என நான் சொன்னது போலவே பேசுகிறீர்களே” என கேட்டார். இதில் இருந்து ஜோதிகாவின் கதாபாத்திரமும் கங்கனாவின் கதாபாத்திரமும் முற்றிலும் வேறு என தெரிய வருகிறது.





