மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை இயக்கிய அனுபவங்களால் மட்டுமே நேரடியாக களத்தில் இயக்குனராக இறங்கி ஜெயித்தவர். கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த போது, இவரது குறும்படங்களை பார்த்து பாராட்டியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கி லோகேஷ் கனகராஜ் ஜெயித்தவர். மாநகரம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அவர் இயக்கிய கைதி விக்ரம் மாஸ்டர் லியோ கூலி படங்கள் எல்லாமே வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகை மற்றும் பாடகி ஸ்ருதிஹாசன் இயக்கி நடித்த ஆல்பம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதியின் காதலராக நடித்திருந்தார். அது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த படம் டிசி.
வன்முறை கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் தெறிப்பது இரத்தம்தான். படம் முழுவதும் வன்முறை காட்சிகளே நிறைந்திருந்தன. துப்பாக்கி கத்தி வெட்டு குத்து என வழக்கமான லோகேஷ் கனகராஜ் படங்களையே இதுவும் நினைவூட்டியது என்றால் அது மிகையல்ல.
எனினும் இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதன் தொடர்ச்சியாக டிசி 2ம் பாகமும் எடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வாமிகா கபி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகிற செப்டம்பர் 4ம் தேதி டிசி படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் டிசி படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம்மிங் செய்யப்பட உள்ளது. தாஸ் என்ற கேரக்டரில் லோகேஷ் கனகராஜூம் வாமிகா கபி சந்திரா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசை பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





