ஒரு திரைப்படமோ அல்லது டிவி சீரியலோ வெப் சீரிஸோ அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி ரசிகர்களின் மனங்களை தன் வசப்படுத்தினால் மட்டுமே அது ஜெயிக்க முடியும். ஆனால் டைட்டிலை கூட யோசிக்க நேரமில்லாமல் பழைய பட டைட்டிலை காப்பியடிப்பதும் மற்ற மொழிகளில் வெளியான வெற்றிப் படங்களின் கதையை அப்படியே சுட்டு படம் எடுக்கும் இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் பெருகி விட்டனர் என்பதே கசப்பான உண்மை.
இந்த சூழலில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் வெப் சீரிஸ் பக்கம் ரசிகர்களின் கவனம் வெகுவாக திரும்பியுள்ளது. உண்மையில் நல்ல கதைக்களத்தில் வித்யாசமான கோணத்தில் விறுவிறுப்பான கேரக்டர்களை கொண்டு யதார்ததமான பல படைப்புகள் வெப் சீரிஸ்களாக வெளிவந்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்ட்ரீம்மிங் ஆன ரிசார்ட் வெப் சீரிஸ் 100 எபிசோடுகளை நிறைவு செய்து இப்போது 2ம் பாகத்துக்கு தயாராகி வருகிறது. நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்த டி பிளாக் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார் இந்த சீரிஸில் ஹீரோவாக வெற்றி கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் எருமசாணி என்ற யூடியூப் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். நட்பே துணை நான் சிரித்தால் டிபிளாக் உள்ளிட்ட சில படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார்.
ரிசார்ட் வெப் சீரிஸ் கதைப்படி ஒரு ரூம் சர்வீஸ் பாயாக பணிசெய்யும் ஹீரோ எப்படி ஸ்டார் செஃப் ஆக வெற்றி பெறுகிறார் என்பதே மையக்களம். அந்த திறமையான இளைஞனை முன்னேற விடாமல் தடுக்கும் செஃப் நெடுமாறன் கேரக்டரில் தலைவாசல் விஜய் மற்றும் அந்த ரிசார்ட் எம்டி ஆக ரகுபதி கேரக்டரில் இளங்கோ குமணன், இலங்கை அகதியாக மீனவர் கேரக்டரில் இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இதில் வரும் இந்த 4 முதன்மை கதாபாத்திரங்களும் சிலை செதுக்கிய சிற்பங்கள் போல அவ்வளவு நேர்த்தியாக துல்லியாக மிக அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விஜயகுமார் இளங்கோ குமணன் தலைவாசல் விஜய் இளங்கோ குமரவேல் என 4 பேரும் அந்த கதாபாத்திரங்களாக திரையில் அழகாக வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். நடிப்பிலும் வசனங்களிலும் கேரக்டரை வெளிப்படுத்திய பக்குவத்திலும் திரையில் அவர்கள் சாகசம் காட்டி அசத்தியிருக்கின்றனர்.
அத்துடன் இந்த வெப்சீரிஸ்சில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் ஐஸ்வர்யா வேணி ரம்யா ரியா ராஜன் பாண்டி விக்கி என ஒவ்வொரு கேரக்டரும் திரையில் தங்களது பங்களிப்பை மிக சிறப்பாக செய்து திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். பசியாற்றும் உணவின் சிறப்புகளை சொல்வது மட்டுமின்றி ஒரு ரிசார்ட் நிர்வாகத்தின் பின்னணியில் நடக்கும் பல நிஜங்களை இந்த வெப் சீரிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியது. மிக விரைவில் ரிசார்ட் 2ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





