பெரும்பாலான பெரிய மனிதர்கள் கையில் பையில் பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களது செல்போன் கூட உதவியாளர்களிடம் தான் இருக்கும். இது நடிகர்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் தனது டிரைவர் அல்லது உதவியாளர்களிடம் பணம் செல்போன் வைத்திருக்க செய்துவிடுவார்கள்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் விருமாண்டி. மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான படம். கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் கமல் அபிராமி நெப்போலியன் பசுபதி ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
விருமாண்டி படப்பிடிப்பு மதுரையில் நடந்த போது நடந்த சம்பவம் இது. அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் கமல்ஹாசன் திடீரென மூடு அவுட் ஆகி காரை எடுத்துக்கொண்டு தனியாக வெளியே கிளம்பி விட்டார். எங்கே செல்கிறோம் என்று திட்டமில்லாமல் மனம் போன போக்கில் காரில் அப்படியே நீண்ட தூரம் சென்றிருக்கிறார்.
அப்போது ஒரு இடத்தில் மரத்தடியில் இளநீர் வியாபாரி ஒருவர் இளநீர் விற்பதை கமல் பார்த்திருக்கிறார். உடனே காரை நிறுத்தி அவரிடம் இளநீர் வாங்கி குடித்திருக்கிறார். கமலை பார்த்த அந்த வியாபாரி திக்குமுக்காடி போய்விட்டார். ஐயா நீங்களா நீங்களா என பலமுறை கேட்டு ஆச்சரியப்பட்டு கமலுக்கு இளநீர் வெட்டி தந்துள்ளார்.
ஆனால் கமல்ஹாசன் இளநீர் குடித்துவிட்டு பார்த்தால் அவரிடம் பணம் இல்லை. காரிலும் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கமல் யோசித்திருக்கிறார். ஆனால் இளநீர் வியாபாரியோ, எனக்கு பணம் எல்லாம் வேண்டாம். உங்களை பார்த்ததே போதும். இன்னும் எத்தனை இளநீர் வேண்டும் வெட்டித் தருகிறேன். காரில் எடுத்துக்கொண்டு போங்கள் என்று அன்பாக கூறியிருக்கிறார்.
அதன்பிறகு கமல்ஹாசன் காரை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள தனது உதவியாளர்களை உடனடியாக அழைத்து, அந்த இளநீர் வியாபாரி குறித்த அடையாளங்களை கூறி பணம் கொடுத்து அவரிடம் தருமாறு அவர்களை அனுப்பியுள்ளார். அதன்பிறகுதான் கமலுக்கு நிம்மதியாக இருந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





