இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிகை ஹயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்த மலையாள படம் ஐ யம் கேம். இந்த படம் தற்போது ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஐயம் கேம் படம் குறித்து ப்ளு சட்டை மாறன் கூறியதாவது, இந்த படத்தின் ஹீரோ பெரிய இடத்துப் பையன். அதனால் நல்ல தொழிலை வீட்டில் அமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் அவருக்கு தொழிலில் ஆர்வம் இல்லை. சூதாட்டத்தில் தான் ஆர்வம். சூதாட்டத்தில் பெரிய தொகையை இழந்து 3 கோடி ரூபாயை கடன் வாங்குகிறார். அவருக்கு அதில் கொஞ்சம் பணமும் கிடைக்கிறது.
அதை வைத்தும் சூதாடுகிறார். அதுவும் போய்விடுகிறது. பிறகு அங்கிருந்து கிளம்பி செல்லும் போது விபத்தில் சிக்குகிறார். அதில் வலது கை டேமேஜ் ஆகிவிட்டது. அவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கை இஷ்டத்துக்கு செயல்படுகிறது. மூளை சொல்வதை கேட்பதில்லை. ஏனென்று பார்த்தால் இந்த கைக்கு சொந்தமானவர் சொல்வதை தான் அந்த கை கேட்கிறது. அந்த கைக்கு சொந்தக்காரர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் மொத்தம் 3 மணி நேரம் ஓடுகிறது. இதில் முக்கால் மணி நேரம் ரொம்பவே நன்றாக போய்விட்டது. எப்போது அவருக்கு கை கண்டமானதோ அங்கேயே படம் படுத்துவிட்டது. அதற்கு பிறகு வழக்கமான சினிமாவில் என்ன நடக்குமோ அதெல்லாம் நடந்து விட்டது. ஹீரோ என்று ஒருவர் இருந்தால் ஹீரோயின் ஒருவர் இருக்க வேண்டும்தானே? அப்படித்தான் ஹையாடு லோஹர் படத்தில் வருகிறார்.
கார்ப்பரேட் வில்லனாக ஒருவரை காட்டுகிறார்கள். அவர் கார்ப்பரேட் லெவலில் யோசிப்பார் என்று பார்த்தால் பேட்டை ரவுடி மாதிரி சண்டை போடுகிறார். இதில் எந்த கேரக்டரும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. எல்லாமே மேம்போக்கான ரைட்டிங் தான். ஒரு கிரிக்கெட் போர்ஷன் வருகிறது. அரை மணி நேரம் வரும் அந்த போர்ஷனில் கிரிக்கெட்டை வைத்தே விளையாடி இருக்கலாம். ஆனால் உப்பு சப்பு இல்லாமல் போய்விட்டது. படம் டெக்னிக்கலாக நன்றாக இருக்கிறது. துல்கர் சல்மான் அவருடன் அவரே சண்டை போடும்படி ஒரு காட்சி வரும். அது ரொம்ப நன்றாகவே இருந்தது.
இந்த மொக்கையான கதை திரைக்கதையை ஓரளவுக்கு பார்க்க வைத்தது மேக்கிங் தான். கதையில் அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பது யோகிக்கும்படி தான் இருக்கிறது. ரொம்ப சாதாரணமா போச்சு. தமிழில் தான் மசாலா படம் எடுக்கிறார்கள் என்று மலையாள பக்கம் போனால் அங்கேயும் இதே மாதிரி எடுத்து வைத்திருக்கிறார்கள். நீங்களுமாடா என்று தான் கேட்கத் தோன்றுகிறது என்று ப்ளு சட்டை மாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





