தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற ஒரு இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், நடிகர் தனுஷின் அண்ணன். இவர் இயக்கிய படங்களில் 7ஜி ரெயின்போ காலனி மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற ஒரு படமாகும். இந்த படம் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது. இப்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.
7ஜி ரெயின்போ காலனி படத்தில் நாயகனாக ரவிகிருஷ்ணாவும் நாயகியாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். காதலை மையப்படுத்திய உருவாக்கிய கதைக்களத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. புதுமுக நடிகர் என்ற அடையாளமே இல்லாமல் ரவிகிருஷ்ணா மிக சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலை இயக்குனர் செல்வராகவன் காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இயக்குனர் செல்வராகவன் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் 2வது திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாக இன்னும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 7ஜி ரெயின்போ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய படத்தின் ஹீரோ நடிகர் ரவிகிருஷ்ணா கூறியதாவது, இது நிறைய பேருக்கு தெரியாத விஷயம். நான் சொல்லணும். இந்த படத்துல ஒரிஜினலா நான் ஹீரோ கிடையாது. முதலில் சூர்யா அல்லது மாதவன் இந்த 2 பேரில் ஒருத்தரை தான் ஹீரோவா பிக்ஸ் பண்றதாக இருந்தது.
அப்போ காக்க காக்க பிதாமகன் போன்ற படங்களில் சூர்யா பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அவரது கால்ஷீட் கிடைக்கலே. அப்புறம் மாதவன், ஏவிஎம் தயாரிப்பில் ஜோதிகா கூட ஒரு படம் பண்ணிட்டு இருந்தாங்க. பிரியமான தோழி படத்துல மாதவன் பிஸியா நடிச்சிட்டு இருந்தார். அதனால் அவரும் டேட் இல்லாமல் இந்த படத்துல ஹீரோவாக நடிக்க முடியவில்லை.
சூர்யாவும் நடிக்கலே, மாதவனும் நடிக்க முடியலே. அப்புறம் யார் நடிக்கிறதுன்னு கேள்வி வந்தப்போ புதுமுகம் யாராவது நடிக்க வைக்கலாம் என்று முடிவு பண்ணினாங்க. அப்புறம்தான் கதிர் கேரக்டரில் நான் நடிக்கணும் என்று முடிவானது. கொழுக் மொழுக்குன்னு நான் குண்டா அப்போ இருந்தேன். அப்புறம் ஒரு மாதம் நான் வெயிட் குறைச்சேன். என்னை வேண்டாம் என்று டைரக்டர் சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் செல்வராகவன் ஓகே சொல்லி விட்டார் என்று நடிகர் ரவிகிருஷ்ணா கூறியிருக்கிறார்.





