இன்று தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டு விதமான குதிரைகளில் பயணித்து வருபவர் எஸ்ஜே சூர்யா. ஆரம்பத்தில் இயக்குனராக எஸ்ஜே சூர்யா வாலி குஷி போன்ற படங்களை இயக்கினார். பிறகு நியூ அன்பே ஆருயிரே போன்ற படங்களை அவர் டைரக்ட் செய்து ஹீரோவாகவும் நடித்தார்.
இதற்கிடையே மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் திருமகன் வியாபாரி கள்வனின் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிறகு 10 ஆண்டுகள் வரை சினிமாவில் காணாமல் போன எஸ்ஜே சூர்யா பிறகு இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போது நடிப்பு அரக்கனாக அசத்திக்கொண்டு இருக்கிறார்.
குறிப்பாக மெர்சல் ஸ்பைடர் ராயன் இந்தியன் 2 மார்க் ஆண்டனி மாநாடு உள்ளிட்ட பல படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா இப்போது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படத்திலும் அதே போல் ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.
சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலத்தில் இயக்குனர் வசந்த் படங்களில் உதவி இயக்குனராக எஸ்ஜே சூர்யா பணிசெய்திருக்கிறார். பாரதிராஜா படங்களிலும் அவர் பணி செய்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் சில காட்சிகளில் எஸ்ஜே சூர்யாவை காணலாம். ஒல்லியான வேட்டி கட்டிய இளைஞனாக அதில் காணப்படுவார்.
விஜயகுமார் நெப்போலியன் இருவருக்கும் இடையே சேவல் சண்டை நடக்கும். அப்போது சேவலை கையில் வைத்துக் கொண்டு எஸ்ஜே சூர்யா திரையில் தெரிவார். அப்போது ஏதேனும் ஒரு வாய்ப்பில் தனக்கு கவனம் கிடைத்து விட வேண்டும் என்று வசனமே இன்றி வாயசைத்து நடித்திருக்கிறார் எஸ்ஜேசூர்யா.
அதன்பிறகு அந்த திரையை கவனித்து பார்த்த இயக்குனர் பாரதிராஜா, எதுக்குய்யா அவன் வாயசைத்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு இந்த சீனில் வசனமே இல்லையே, என்று எஸ்ஜே சூர்யாவை அழைத்து எச்சரிக்கை செய்துவிட்டு பிறகு மீண்டும் அந்த காட்சியை எடுத்துள்ளார். அப்படி வாயசைத்தால் தனக்கு டப்பிங்கில் பேச வாய்ப்பளித்து ரசிகர்களிடம் கவனம் பெற மாட்டோமா என்று அப்படி முயற்சித்ததாக எஸ்ஜே சூர்யா ஒரு நேர்காணலில் இப்போது கூறியிருக்கிறார்.





