பல படங்களில் தன்னுடன் நடித்த வில்லன் நடிகர் எஸ்ஏ அசோகனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம் தான் நேற்று இன்று நாளை. இந்த படத்துக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைக்க முடிவானது. அந்த படத்துக்காக பல டியூன்களை எம்எஸ் விஸ்வநாதன் உருவாக்கிக்கொண்டே இருப்பார். அதை படத்தின் தயாரிப்பாளர் நடிகர் எஸ்ஏ அசோகன் மூலமாக எம்ஜிஆருக்கு அவர் அனுப்பி வைப்பார்.
இப்படி அவர் தந்து அனுப்பிய பாடல்களை எம்ஜிஆரிடம் போட்டுக் காட்டுவார் அசோகன். ஆனால் அவற்றை கேட்டுவிட்டு எம்ஜிஆர் பிடிக்கவில்லை என்று கூறிவிடுவார். வேறு டியூன்களை போட்டுக்கொண்டு வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார். இப்படியே பலமுறை நடந்தது. பல மாதங்களும் இப்படியே ஓடிவிட்டது.
மீண்டும் மீண்டும் எம்எஸ் விஸ்வநாதனிடம் சென்று எம்ஜிஆர் டியூன் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு அசோகனுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. இருந்தாலும் இது திரும்ப திரும்ப நடந்தது. 20 30 பாடல்களுக்கு டியூன் போட்டு தருவதும் எம்ஜிஆர் பிடிக்கவில்லை வேறு டியூன் போடச் சொல்லுங்கள் என்று அசோகனை திருப்பி அனுப்புவதும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன எம்எஸ் விஸ்வநாதன், இனி எம்ஜிஆர் நடிக்கும் இந்த படத்துக்கு நான் டியூன் போட மாட்டேன் என்று சொல்லி விடுங்கள் என்றும் கோபமாக அசோகனிடம் கூறியிருக்கிறார். இந்த தகவல் எம்ஜிஆரின் காதுகளுக்கு சென்றது. உடனடியாக எம்எஸ்வியை காண அவரது வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார் எம்ஜிஆர்.
அப்போது எம்எஸ் விஸ்வநாதனிடம், விச்சு நீங்க போட்ட எல்லா டியூன்களுமே ரொம்பவும் சூப்பராக இருந்தது. ஆனா நீங்க போட்ட பாட்டு எல்லாம் நல்லா இருக்குதுன்னு சொன்னால் உடனே அடுத்த வாரமே அசோகன் படப்பிடிப்புக்கு ஏற்பாடு பண்ணிடுவார். அவருக்கு கொடுக்க என்கிட்ட கால்ஷீட் இல்லை.
கால்ஷீட் இருந்தால் தானே அவரது படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியும்? அதனால் தான் படப்பிடிப்பை தள்ளிப் போட வேண்டும் என்பதற்காக நீங்க போட்ட டியூன் பிடிக்கலே பிடிக்கலே என்று சொல்லி காலத்தை கடத்தினேன். மற்றபடி நீங்க போட்ட எல்லா டியூனுமே எனக்கு பிடித்தது. அதில் படத்தில் நான் பயன்படுத்த ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். இந்த தகவலை நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





