தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தாடி பாலாஜி. நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்தவர். இப்போது தவெக கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலி சென்ற நடிகர் தாடி பாலாஜி அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கரூரில் நடந்த துயர சம்பவம் நடிகர் விஜயை கடுமையாக பாதிப்படைய செய்திருக்கிறது. அவர் மிகவும் மன வருத்தத்தில் இருந்து வருகிறார். விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்க உள்ளார்.
துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வீடியோ காலில் அழைத்து இப்போது பேசியிருக்கிறார். அவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதலும் கூறியிருக்கிறார். மிக விரைவில் அந்த மக்களை நேரில் சந்திப்பார் என்று நானும் நம்புகிறேன். கரூரில் அந்த கூட்டம் நடந்த இடம் மிகவும் குறுகியது. அந்த இடத்தை எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.
தலைவர் விஜய் அந்த இடத்துக்கு முன்பு போகவில்லை. அப்போதுதான் போயிருக்கிறார். ஆனால் அந்த இடத்தை முதலில் சென்று ஆய்வு செய்தவர்கள் தேர்வு செய்தவர்கள் 2ம் கட்ட தலைவர்கள். புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூன் நிர்மல்குமார் போன்றவர்கள்தான் அந்த இடத்தை முதலில் பார்த்து ஆய்வு செய்தவர்கள். அவர்கள் அந்த இடத்தை மறுத்திருக்க வேண்டும். வேறு இடம் கேட்டிருக்க வேண்டும்.
அப்படி மாற்று இடம் தரவில்லை என்று காவல் துறை சொன்னால் கூட்டத்தையே தள்ளி வைத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யாமல் விட்டுவிட்டனர். இந்த துயர சம்பவம் நடக்க அதுவும் ஒரு முக்கிய காரணம். துயர சம்பவம் நடந்த சமயத்தில் விமான நிலையத்தில் விஜய் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சந்திக்கவில்லை.
ஆனால் அவர் அப்போது பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தால் இன்னும் அது வேறுமாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் விரைவில் விஜய் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார். அப்போது பூகம்பம் கண்டிப்பாக வெடிக்கும் என்று நான் நினைக்கிறேன். விரைவில் அவர் பிரஸ்மீட் நடத்த வாய்ப்புள்ளது என்று நடிகர் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.





