தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். ஆசிரியராக இருந்து நடிகராக மாறியவர். நடிகர் சிவக்குமாரை போலவே இவரும் 100 சதவீதம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அற்புதமான கலைஞர். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் இருந்த 4 திரை ஆளுமைகளின் அன்புக்கு உரியவராகவும் வலம் வந்தவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ராஜேஷ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அப்போது எனக்கு 45 வயசு. ஒரு வாரப் பத்திரிகையில உண்மைக்கு மறுபெயர் ராஜேஷ்ன்னு தலைப்புக் கொடுத்து எழுதியிருந்தாங்க. அதைத்தான் நான் சம்பாதித்த சொத்தாக நினைக்கிறேன். நான் எம்.ஜி.ஆர் சிவாஜி கலைஞர் ஜெயலலிதான்னு 4 பேரின் அன்பையும் பெற்றதற்குக் காரணம் இந்தக் குணம்தான்.
பலரும் என்னை கௌரவமா நடத்துவதற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய புத்தக அறிவும் உண்மையும்தான். சிவாஜி சார் ஒருமுறை, ரொம்ப பயப்படுற ரொம்ப யோசிக்கிற கெட்ட பேர் வரக்கூடாதுன்னு பார்க்கிறே. அதனாலதான் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறே. அதனாலதான் நீ நல்ல பேரு வாங்கி இருக்கிறேன்னு சொன்னார். என்னை நூற்றுக்கு 98 பேர் பாராட்டுறாங்க.
ரெண்டு பேர் காமெடியா பார்ப்பாங்க. அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன். எல்லாத்துலயும் உள்ள நல்லதை மட்டும்தான் எடுத்துக்குவேன் அன்னப்பறவை மாதிரி. இது நடந்தால் சந்தோஷம் நடக்கலைன்னா ரொம்ப சந்தோஷம்னு போய்க்கிட்டே இருப்பேன். வாலிப காலம் வறுமையாக இருந்ததால எந்தக் கெட்ட பழக்கமும் என்கிட்ட வரலை. குடிப்பழக்கம் புகைப்பழக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. இன்று வரை சுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்.
அதுவும் குறிப்பா சினிமா ஃபீல்டுல உண்மையைப் பேசினதால நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கேன். எவ்வளவோ இழந்தாலும், இத்தனை காலம் கழித்தும் உண்மையால் கிடைக்கிற அறுவடை சந்தோஷமா இருக்கு. இப்போ கிடைக்கக்கூடிய மன நிறைவு, செல்வம் இவற்றையெல்லாம் திருப்தியா ஃபீல் பண்ண முடியுது.
என் சாதனைகளைவிட என் பொருளாதாரத்தை விட 100 மடங்கு மரியாதையையும் கௌரவத்தையும் இந்தச் சமூகம் எனக்குத் திருப்பித் தந்திருக்கு. அது எத்தனை கோடி செலவு செய்தாலும் பெற முடியாதது என்று நடிகர் ராஜேஷ் அந்த நேர்காணில் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





