துணிவு படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சொல்லப்போனால் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் மீதும் ஆர்வம் காட்டி வருகிறார். இது அஜித் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் ஆகவே இருக்கிறது.
இதில் விடா முயற்சி திரைப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அதன் இயக்குனர் மகிழ் திருமேனியே இதனை உறுதி செய்தார். எஞ்சிய படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. அனேகமாக தீபாவளிக்குள் இந்த திரைப்படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க குட் பேட் அக்லி படத்தின் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் எடுக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தில் அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றும், அவர் மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியான போஸ்டர் அமைந்தது. இந்தப் படத்தில் நடிக்க மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவர் படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித்தை அடுத்து இயக்குபவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ரேஸில் மோகன் ராஜா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. தற்போது இந்த லிஸ்டில் பிரம்மாண்ட பட இயக்குனர் சங்கர் இணைந்து இருக்கிறார். சமீபத்தில் அஜித் மற்றும் சங்கர் இருவரும் சந்தித்துள்ளார்களாம். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் நிச்சயம் கதை குறித்து தான் விவாதித்து இருப்பதாகவும், இதனால் அஜித் படத்தை அடுத்து சங்கர் இயக்க நிறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





