தமிழ் சினிமாவில் 51 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் புகழின் உச்சம் தொட்டவர். உலக சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இன்னும் 75 வயதிலும் அவர் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து தர்மன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரஜினிகாந்த் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்வத்துடன் ஓடிவந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரசிகரை தடுத்து நிறுத்தி விட்டனர்.
தனது ரசிகர் தடுக்கப்படுவதை ஒரு வினாடியில் பார்த்து புரிந்துக்கொண்ட ரஜினிகாந்த் தனக்கு அருகில் நடந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம், அவரை தடுக்காதீங்க, வர விடுங்க என்று கூறி பிறகு அந்த ரசிகரை அருகில் அழைத்து, அவருடன் புன்னகையுடன் செல்ஃபி புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தார். அந்த ரசிகர் சந்தோஷமாக அங்கிருந்து சென்றார்.
இப்போது உள்ள பெரிய நட்சத்திர நடிகர்கள் யாரும் ரசிகர்களை சிறிதும் மதிப்பதில்லை. பவுன்சர்கள் மற்றும் செக்யூரிட்டிகளை வைத்து அருகில் வரும் ரசிகர்களை விரட்டி விடுகின்றனர். இன்னும் சிலர் தன்னை நெருங்கும் ரசிகர்களை பார்த்தாலே கோபப்படுகின்றனர். சமீபத்தில் அஜீத்குமார் கூட ஒரு ரசிகரை முறைத்த ஒரு வீடியோ வைரலானது.
ஆனால் ஒரு நல்ல மனிதன் ஒரு சிறந்த கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற மூத்த நடிகர்களை பார்த்து அஜீத்குமார் போன்ற நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும். கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்த நாளில் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்காக நாள் முழுவதும் புகைப்படம் எடுத்துக்கொள்ள நின்று விடுவார் என்று பலரும் கூறியிருக்கின்றனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் மீறி ரசிகரின் விருப்பத்தை மதித்து பரிவுடன் ரஜினிகாந்த் நடந்து கொண்ட இந்த எளிய மற்றும் அன்பான குணம் அங்கிருந்தவர்களையும் இணையத்தில் வீடியோவைப் பார்த்த ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த ஒரு வினாடி பார்வையில் தன் ரசிகனை அரவணைத்துக்கொண்ட அந்த குணமும் மனமும்தான் அவரை எப்போதும் கொண்டாட வைக்கிறது.





