விநியோகஸ்தராக இருந்து பின்னர் தயாரிப்பாளராக மாறி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். முதல் படத்தில் சந்தானத்தின் காமெடியுடன் தப்பித்துவிட்டார் உதயநிதி. அதை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு உதயநிதி நடித்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
படுதோல்வியை சந்தித்தாலும் எப்படியாவது சினிமாவில் பெரும் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருந்தார் உதயநிதி. அதேசமயம் அவருக்கு நடிப்பே வரவில்லை என்ற விமர்சனங்களும் கடுமையாக எழுந்தன. அப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த மனிதன், கண்ணே கலைமானே, நிமிர் ஆகிய மூன்று படங்களும் வசூல் ரீதியான வரவேற்பைப் பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக உதயநிதிக்கு நல்ல நடிகர் என்று பெயரையும் பெற்றுக்கொடுத்தன.
அதனையடுத்து கதை தேர்வில் கவனம் செலுத்திய உதயநிதி மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்தார். படம் ப்ளாப் ஆனது. தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அந்தப் படமானது விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக ஆனார். பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அமைச்சராகிவிட்டதால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்த அவர் கடைசி படமாக மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. யாருக்கும் கடைசி படம் இவ்வளவு சிறப்பாக அமையாது என உதயநிதி ஸ்டாலினை கமல் ஹாசனும் பாராட்டியிருந்தார். முக்கியமாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் வசூலித்தது.
மாமன்னனுக்கு பிறகு சினிமாவிலிருந்து அவர் ஒதுங்கியிருந்தாலும் திரைப்படங்கள் பற்றிய கருத்தை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் என்ற படம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், “ஆர்டிஎக்ஸ் என்ற மலையாள திரைப்படத்தினை பார்த்தேன். இந்தியாவில் வந்த சிறந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம். தியேட்டருக்கு சென்று இந்தப் படத்தை பாருங்கள். ஆதரவு கொடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஆர்டிஎக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நஹாஸ் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷேன் நிகம், நீரஜ் மாதவ், ஆண்டனி வர்கீஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.





