நடிகர் விஜய் தமிழக முதல்வரான பிறகு பலருக்கும் அரசியல் ஆசை அதிகரித்து விட்டது. இப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் எந்த கட்சியில் இணையப் போகிறார், அல்லது அவரே சொந்தமாக அரசியல் கட்சி துவங்கப் போகிறாரா என்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில் மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசி பலத்த எதிர்ப்பை மக்களிடம் சம்பாதித்துவிட்டார் இந்த சேவை நாயகன்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த அரசியலுக்குள் வரும் ஒரு முயற்சியை செய்துக்கொண்டே தான் இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் அங்கே ஒரு துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்தார்.
அப்புறம் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் லாரன்ஸ்சும் பின்வாங்கி அமைதியாகி விட்டார். இப்போது சினிமாவில் இருந்து வந்த விஜய்க்கு பெரிய வெற்றி கிடைத்தவுடன் மீண்டும் லாரன்ஸ்க்கு அந்த அரசியல் ஆசை வந்து விட்டது. நான் என்ன சொல்கிறேன் என்றால், லாரன்ஸ்சிடம் நிறைய பணம் இருக்கிறது.
தமிழ்நாடே தனக்கு பின்னால் இருப்பதாக ஒரு கனவும் இருக்கிறது. அரசியலுக்கு வரணும் என்றால் வந்து விடுங்கள். இதில் நான் வரட்டுமா, வேண்டாமா என்று கேட்பதெல்லாம் பெரிய அபத்தமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் வரவேண்டாம் என்றோ, வர வேண்டும் என்றோ எங்கு வந்து சொல்ல வேண்டும்?
திருவாரூரில் இருந்து மன்னார்குடியில் இருந்து கன்யாகுமரியில் இருந்து நாங்க பஸ் பிடிச்சு வந்து உங்க வீட்டில் வந்து நாங்கள் சொல்லணுமா? ஐயா நீங்க அரசியலுக்கு வாங்க என்று சொல்லணுமா? டோல் ப்ரீ நெம்பர் கொடுத்தீங்களா, தனியா ஒரு சோஷியல் மீடியா பக்கத்துல இதை சொல்ல சொன்னீங்களா? இது எல்லாமே ஒரு பப்ளிசிட்டிக்காக அவர் செய்கிற வேலை என்பது தெளிவாக தெரிகிறது.
இவர் ஏதாவது ஒரு கட்சிக்குள் போகணும். இல்லேன்னா தனியாக ஒரு கட்சி தொடங்கணும் என்ற மைண்ட் செட்டுக்கு வந்துட்டார். அதை முடிவு செய்துவிட்டார். அப்படியே செய்துவிட்டு போக வேண்டியதுதானே? மக்கள் விருப்பத்தை கேட்டுதான் அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து எல்லாமே செய்கிறார் என்பதை போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அது ரொம்பவும் சீப்பாக உள்ளது என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





