ரஜினியை வைத்து மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பி.வாசு. இவர் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் லைகா சுபாஸ்கரன், தமிழ்க்குமரன், பி.வாசு, லாரன்ஸ், கங்கனா ரணாவத் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய பி.வாசு, ”சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பவர்கள் முதலில் லாரன்ஸ் நடிப்பையும் பிறகு கங்கனா நடிப்பையும் பாராட்டுவீர்கள். அதேபோல் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பாராட்டுவீர்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சுபாஸ்கரன் அருமையான முதலாளி. அவர் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 10,000 குடும்பங்கள் அவரால் வாழ்கின்றன. ஆனால் அது பற்றி எதுவுமே அவருக்கு தெரியாது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எனது அருகில் அமர்ந்திருந்தார். அந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். தமிழ்க்குமரனை கூப்பிட்டு எதையோ சொன்னார். அவர்கள் நடனம் ஆடி முடித்ததும் மேடையில் வைத்தே ஒரு கோடி ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது.
புரட்சி நடிகர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும்தான். அதுபோல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். யாரையும் அவருடன் ஒப்பிடாதீர்கள். விஜய்யோ, அஜித்தோ அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இங்கு இருக்கிறது. அனைவருமே கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அதற்கான பலனை மக்கள் கொடுக்கிறார்கள். பட்டத்தையும் கொடுக்கிறார்கள். எனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.
முன்னதாக ரஜினியின் சில படங்கள் கடந்த சில வருடஙக்ளாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினி சூப்பர் ஸ்டார் நாற்காலியிலிருந்து விரைவில் இறங்கிவிடுவார். அந்த நாற்காலியை விஜய் அலங்கரிக்கப்போகிறார் என்று குரல்கள் எழுந்தன. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரச்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய லாரன்ஸ்கூட, தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமென்று விஜய் எப்போதாவது கேட்டிருக்கிறாரா. அவர் ரஜினியை தலைவர் என்றுதான் அழைப்பார். எனவே இந்த விஷயம் தேவையில்லாதது என கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.





