நடிகர் கமல்ஹாசனின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரே சொந்தமாக தயாரித்து நாயகனாக நடிக்கும் 237 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சித்தா பட இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறி ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், பழிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் இப்போது தமிழ் சினிமாவிலும் சமூக வலைதளங்களிலும் மாபெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் லெனின் பாரதி தனது எக்ஸ் பதிவில், கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக்கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கொஞ்சமும் சமூக சிந்தனை இல்லாமல் பழிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும் என்று தனது அடுத்த திரைப்படத்தின் விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்.





