- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரிமுத்துவின் காதல் தோல்வி... அதுவே முதல் படத்தின் கதையா? - திருமண நாளை கொண்டாடிய ஒரு...

மாரிமுத்துவின் காதல் தோல்வி… அதுவே முதல் படத்தின் கதையா? – திருமண நாளை கொண்டாடிய ஒரு வாரத்தில் மரணம்… சோகத்தின் மேல் சோகம்

- Advertisement -

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் திறமை மிக்க கலைஞர்களை எப்போதும் கொண்டாடத் தவறியதில்லை. அந்த வகையில் சமீப காலமாக அனைவரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்ட பெயர் என்றால் அது ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம் தான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியலில் ஆதி குணசேகரனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. அது நெகடிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் மாரிமுத்து, தனக்கே உரித்தான பாணியில் பேசும் எதார்த்தமான வசனங்களும், உடல் மொழியும் பலராலும் கொண்டாடப்பட்டது.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து பேசும் வசனங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பரவ விட்டனர். சமீபத்தில் கூட மாரிமுத்து ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி மாரிமுத்துவின் வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில், இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேச சென்ற மாரிமுத்து மாராடைப்பால் அகால மரணமடைந்தார்.

இந்த செய்தி வெளியானது முதல் மாரிமுத்துவின் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பலரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாக்களில் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது வெற்றிகரமான நடிகராக இருந்தாலும் மாரிமுத்து ஆரம்ப காலத்தில் ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். ஏன் சிம்பு இயக்கி நடித்த ‘மன்மதன்’ படத்திலும் இணை இயக்குநாராக பணியாற்றியதாக அவரே தெரிவித்தார்.

அதன் பின் கடந்த 2008ஆம் ஆண்டு பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014இல் புலிவால் படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. இருப்பினும் மாரிமுத்து மருது, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சமீபத்தில் கூட ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியன் 2 படத்திலும் நடித்துவந்தார்.

இதனிடையே மாரிமுத்து தனது முதல் படத்தின் கதையை தனது சொந்த வாழ்வில் இருந்தே எடுத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் சிவகாசியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தபோது, குற்றாலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டு கடிதம் வாயிலாக கவிதைகளை அனுப்பி வந்திருக்கிறார். பின்னர் இருவரும் காதலை உறுதி செய்த பின் அப்பெண்ணை காண்பதற்காக குற்றாலத்தில் அவர் சொன்ன முகவரிக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளார். இதை வைத்தே தனது முதல் படத்தை இயக்கியதாக அவர் கூறினார்.

மாரிமுத்து கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். உதவி இயக்குநராவதற்கு முன் கவிஞர் வைரமுத்துவிடம் மாரிமுத்து உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாரிமுத்துவின் திருமணத்திற்காக வைரமுத்து பாட்ஷா படத்தின் ரெக்கார்டிங்கை கேன்சல் செய்துவந்ததாகவும் மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இளமையில் காதல் கொண்டாலும் மாரிமுத்து, 1994ஆம் ஆண்டு உறவினரான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து, அவரது மனைவியும் கடந்த செப். 2ம் தேதியன்றே தங்களின் 27ஆவது திருமண நாளை கொண்டாடினர். அது நடந்து சில தினங்களிலேயே மாரிமுத்து மரணமடைந்திருப்பது, அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சற்று முன்