தமிழ் சினிமாவில், கடந்த 1980 -90களில் நடித்த இளம் நடிகர்களில், பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராம்கி. இவரது ஹேர் ஸ்டைலும், அழகான சிரிப்பும், இளமையான தோற்றமும், சிறந்த நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராம்கி நடித்த படங்கள் என்றாலே, தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அவரது படங்களில் பாடல்கள் செம ஹிட் ஆக அமையும்.
சின்னப்பூவே மெல்லப் பேசு, செந்தூரப் பூவே, பாளையத்து அம்மன், பெண் புத்தி பின்புத்தி, மருதுபாண்டி, மாயாபஜார் 1995, கருப்பு ரோஜா, தடயம், நிலவே முகம் காட்டு, குற்றப் பத்திரிகை, இரட்டை ரோஜா, பொட்டு அம்மன், கல்யாண வைபோகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடித்த நிரோஷாவையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இப்போது, படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட ராம்கி, எப்போதேனும் சில படங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில், நடிகர் ராம்கி தனது 33 ஆண்டு கால கனவாக ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில், நாம் விரும்பும் நடிகர்கள் இதற்கு ஒத்துக்கொண்டால், என் ஆசை நிறைவேறிவிடும் என்றும் சொல்லி இருக்கிறார். கடந்த 33 ஆண்டுகளுக்கு முன், ராம்கி – அருண்குமார் நடிப்பில் வெளிவந்த படம் ‘இணைந்த கைகள்’. அதாவது, 1990ல் வந்த இந்த படம், அந்த காலகட்டத்திலேயே மிக பிரமாண்டமான படமாக பேசப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பாடல்காட்சிகளும் சிறப்பாக இருந்தன.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்த ஆக்ஷன் படத்தை, அப்போதே பிளாக் பஸ்டர் மூவியாக, ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ராம்கி – அருண் குமார் ஆகியோரது ஆக்ரோஷமான நடிப்பு, படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. ராம்கி, அருண் பாண்டியனுடன் நாசர், நிரோஷா, ஸ்ரீவித்யா, சிந்து, சார்லி, செந்தில் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை என்.கே விஸ்வநாதன் டைரக்ட் செய்திருந்தார். ஆபாவாணன் திரைக்கதை அமைத்திருந்தார்.
20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பல படங்கள் தற்போது மீண்டும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘இணைந்த கைகள்’ படத்தை அதே கதை அம்சத்துடன் டைரக்ட் செய்ய விரும்புகிறார் ராம்கி. அதில் அருண்பாண்டியன் நடித்த கேரக்டரில் கார்த்தி அல்லது விஷால் நடிக்க சம்மதித்தால், மீண்டும் அந்த சிறப்பான படத்தை, இப்போதைய ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்து விடுவேன், என்கிறார் ராம்கி.
தொழில்நுட்பங்கள் வெகு குறைவாக இருந்த காலகட்டத்திலேயே அவ்வளவு பிரமாண்டமாக பேசப்பட்ட ‘இணைந்த கைகள்’ படம், இப்போது புதுப்பொலிவுடன் வந்தால், நிச்சயம் அதுவும் ஒரு விக்ரம் போல, கைதி போல, ஜெயிலர் போல, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெறும் பிளாக் பஸ்டர் படமாக நிச்சயம் இருக்கும்.





