தமிழ் சினிமாவில், இப்போது பிறமொழிகளில் நடித்த நடிகர்கள் நடிப்பது அதிகரித்து வருகிறது. அதுவும் வில்லன் ரோல்களில் நடிக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். சில பிரபல நடிகர்கள் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள் மத்தியில், இந்தி, மலையாள படங்களின் அறிமுகமும் இருப்பதால், எளிதில் அவர்களது நடிப்பு பிடித்து விடுகிறது.
உதாரணமாக உன்னைப் போல் ஒருவன் படத்தில், போலீஸ் கமிஷனராக மோகன் லால் நடித்தார். அடுத்து ஜில்லா படத்தில், விஜய் தந்தையாகவும், இப்போது, ஜெயிலர் படத்தில், ரஜினிக்கு நண்பராகவும் மோகன்லால் நடித்திருந்தார். இதே படத்தில், மலையாள நடிகர் விநாயகன், பிரதான வில்லனாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருக்கிறார்.
அதேபோல், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பிகில் படத்தில் வில்லனாக இருந்தார். ஜெயிலர் படத்திலும் ரஜினிக்காக சில காட்சிகளில் நடித்திருந்தார். லியோ படத்தில், சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தி, மலையாள நடிகர்கள் தமிழில் அதிகமாக நடிப்பதால் ரசிகர்களும் அவர்களது நடிப்பை ரசிக்க துவங்கி விட்டனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அஜீத்குமார் – சஞ்சய் தத் இருவரும் இருப்பது போன்ற புகைப்படம் வந்து வைரலானது. இதனால், விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் தான் வில்லன் என்ற தகவல் பரவியது. அதே போல், இப்போது அஜீத்குமார் – மோகன் லால் சந்தித்த புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி விட்டது. அதனால், மோகன்லாலும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், சமீபத்தில் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடிகர் அஜீத்குமாரின் நண்பர் அஜீத்குமார் நம்பியார் என்பவரது பிறந்த நாள் விழாவில், அஜீத் பங்கேற்றுள்ளார். அதுவும் கோட் சூட் கெட்டப்பில். அந்த விழாவுக்கு வந்த மோகன்லாலை பார்த்து இருவரும் பேசி இருக்கின்றனர். அதேபோல், சஞ்சய் தத்தும், ஒரு நிகழ்ச்சியில் அஜீத்குமார் சந்தித்த போது எடுத்த புகைப்படம் அது. மற்றபடி, இந்த புகைப்படங்களுக்கும் அஜீத் குமார் படத்தில் அவர்கள் நடிப்பதாக கூறிய தகவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதில் கோட் சூட் போட்ட நிலையில், நட்சத்திர ஓட்டலில் அஜீத் நடந்து செல்வதைப் போன்ற வீடியோ கிளிப்பிங்ஸ் வெளியானதால், ரசிகர்களை சந்திக்கிறார் என்ற தகவலும் வேகமாக பரவியது. ஆனால், அதுவும் இப்போது வதந்தி என்பது தெளிவாகிறது. அஜீத் ஓட்டலுக்கு வந்தது, அவரது நண்பர் அஜீத்குமார் நம்பியாரின் பிறந்த நாள் விழாவுக்கு என்பதும் உறுதியாகி விட்டது.





