தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார் மமீதா பைஜூ. மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான பிரேமலு என்னும் ஒரு திரைப்படம்தான் அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கிரிஸ் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக பிரேமலு எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ரீனு என்னும் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மமீதா பைஜூ. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்தார்கள். பிரேமலு திரைப்படமும் வெறும் 3 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. மலையாளத்தை தாண்டி தமிழிலும் பிசியான நடிகையாக மமீதா பைஜூ மாறிவிட்டார்.
இதில் அவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் ரெபல். ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. மமீதா பைஜூவுக்கும் எந்த ஒரு திருப்பத்தையும் கொடுக்காமல், இந்தத் திரைப்படம் கடந்து சென்றது. இருப்பினும் நடிகைக்கு அடுத்தடுத்து தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் இணையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது. மிக முக்கியமாக விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தில், நடித்து முடித்து இருக்கிறார் மமீதா பைஜூ. இதில் பூஜா ஹெக்டேவுக்கு ஹீரோயின் அந்தஸ்து கொடுத்திருந்தாலும், மமிதாவுக்கும் முக்கிய ரோல் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல் வெங்கி அட்லூரி, இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திலும் ஹீரோயின் ஆக வருகிறார் மமீதா பைஜூ.
இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் படத்திலும் கதாநாயகி மமீதா பைஜூதான். இதுபோக, முண்டாசுப்பட்டி ராட்சசன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ராம்குமார் இயக்கியிருக்கும் இரண்டு வானம் படத்திலும் கதாநாயகியாக மமீதா பைஜூவே நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மமீதாவிடம் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், உங்களுக்கெல்லாம் விஜய் சாரின் நடனம் குறித்து தெரியும். நான் அதைப் பார்த்து தான் வளர்ந்தேன். முதல் நாள் சூட்டிங்கே அவருடன் நடன காட்சியில்தான் நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து தளபதி கச்சேரி என்னும் பாடல், தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ இருவரும் விஜயுடன் நடனமாடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





