ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்ற அவர், துள்ளலான இசையமைப்பினால் ரசிகர்களில் நெஞ்சில் குடி கொண்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, பாலிவுட் வரை ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் பரவ, உலகிலேயே மிக உயரிய விருதான ஆஸ்கரையும் அவர் வென்றுள்ளார்.
90களில் ஆரம்பித்து இப்போது வரை தமிழ் சினிமா போற்றும் இசையமைப்பாளராக அவர் வலம் வருகிறார். அவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று பலரும் கூறி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்வு ஏ.ஆர்.ரஹ்மான் மீதான பார்வையை மாற்றியது. எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கென இங்கு பெரிய வரவேற்பு உண்டு.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும். இப்படி இருக்க, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி மீண்டும் நடைபெற்றது.
மொத்தம் 25 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கே அங்கு அனுமதியளிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி நிறுவனம் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று தீர்த்தது. ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த நிலையில், வாகன நிறுத்துமிடத்திற்கான ஏற்பாட்டையும் சரிவர செய்யவில்லை.
இதனால் நிகழ்ச்சியை காண சென்றவர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து பல மீட்டர் தூரம் காத்திருந்த அவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில், முதல்வரின் கான்வாயும் சிக்கியதாக தகவல் வெளியானது. பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களுக்கு பணத்தை தரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 10ம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கமென்ட் செக்சனையும் அவர் பூட்டி வைத்துள்ளார். ரசிகர்களுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்த நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை பதிவிட்டது மட்டுமல்லாமல், கமெண்ட் செக்சனையும் ஏ.ஆர்.ரஹ்மான் பூட்டி வைத்திருப்பதை அறிந்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் வலியை உணராமல் இசைப்புயல் இப்படி செய்வார் என கனவில் எதிர்பார்க்கவில்லை என சிலர் புலம்பி வருகின்றனர்.





