தமிழ் சினிமா இயக்குநர்களில் பல வெற்றிப்படங்களை தந்தவர் பி. வாசு. சின்னதம்பி, சந்திரமுகி, மன்னன் போன்ற பல படங்களை சொல்லலாம். அவர் ரஜினியை ஹீரோவாக வைத்து, பல ஆண்டுகளுக்கு முன் இயக்கி வெளிவந்த படம் தான் சந்திரமுகி. படம், இப்போதும் பெருமளவில் ரசிக்கப்படும் ரஜினி படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் சந்திரமுகி பேயை விரட்ட, வேட்டையன் கேரக்டரில் நடிப்பில் அதகளம் செய்திருப்பார் ரஜினிகாந்த்.
அப்படிப்பட்ட படத்தின் பெயரை டைட்டிலாக வைத்து, தற்போது பி.வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் சந்திரமுகி 2. ஆனால், அந்த படத்துக்கும், இந்த படத்துக்கும் ரசிகர்கள் ரசிப்பதற்கான எந்த விஷயமும் சிறிதும் இல்லை. என்றாலும், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தின் ஹீரோவாக சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். வடிவேலு காமெடி காட்சிகள், சிரிப்பை வரவழைக்காமல் ரசிகர்களுக்கு பயங்கர எரிச்சலை தந்திருக்கிறது.
இந்த படம் பற்றி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த படத்தில் வரும் சந்திரமுகி கேரக்டர் பேயா, பைத்தியமா என்பதை படத்தின் ஹீரோயினிடம் இயக்குநர் தெளிவாக சொன்னாரா, ஏனெனில் படத்தில் வரும் நாயகி, பல இடங்களில் பேயாக நடிப்பதற்கு பதிலாக, பைத்தியம் போல நடித்திருக்கிறார் என பயங்கரமாக கிண்டல், கேலி செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த நிலையிலும் சந்திரமுகி 2 படத்தில் நடித்த கங்கனா ரனாவத்துக்கு தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில், அவர் கதையின் நாயகியாக நடிக்க, அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
நடிகை கங்கனா ரனாவத், மிக திறமையான நடிகை. அவர் இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய தலைவி என்ற படத்தில், ஜெயலலிதா கேரக்டர் நடித்ததும் இவரே. இதில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். கருணாநிதி கேரக்டரில் நாசர் நடித்திருந்தார்.
சந்திரமுகி 2 படத்தில், கங்கனா ரனாவத் நடிப்பை ரசிப்பதற்கு என்றும், ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருக்கிறார் என்றும்தான், இந்த படத்தை காண பலரும் விரும்பி வந்தனர். ஆனால், சந்திரமுகி படத்தை 2ம் பாகமாக எடுத்து, ரசிகர்களுக்கு பி.வாசு மட்டுமே தனியாக காமெடி செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆனாலும், கங்கனா ரனாவத்துக்கு மீண்டும் தமிழில் ஒரு சுற்று வர, சந்திரமுகி 2 வாசலை திறந்து விட்டிருப்பதாக சொல்லலாம்.





