ஆரம்பத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. குறிப்பாக வெண்ணிலா கபடிக்குழு புதுப்பேட்டை சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஆனால் இப்போது படம் பார்ப்பவர்களுக்கு தான் அவர் விஜய் சேதுபதி என்பதே தெரியும். ஆனால் விஜய் சேதுபதி பிரபலமாவதற்கு முந்தைய படங்களாக அவை இருந்தன.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரம்மி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறிய விஜய் சேதுபதி தர்மதுரை கருப்பன் ஆண்டவன் கட்டளை காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பிறகு பேட்ட விக்ரம் மாஸ்டர் ஜவான் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து விஜய் சேதுபதி அசத்தினார்.
ஆரஞ்சு மிட்டாய் கடைசி விவசாயி போன்ற சில படங்களையும் விஜய் சேதுபதி சொந்தமாக தயாரித்தார். துணை நடிகராக அறிமுகமாகி கதாநாயனாக நடித்து பிறகு வில்லன் தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த நடிகர் விஜய் சேதுபதி இப்போது பாடல் எழுதும் கவிஞராக மாறி இருக்கிறார்.
இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் வின்னர் ராஜூ, பவ்யா தாரிகா ஆதித்யா பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே இசையமைத்துள்ளார். பன் பட்டர் ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இதன் மூலம் திரைப்பட பாடலாசிரியர் என்ற அடையாளமும் விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது.
விஜய் சேதுபதி எழுதியுள்ள ஏதோ பேசத்தானே என்ற பாடலை, நடிகர் சித்தார்த் தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பு பணிகளுக்கு இடையே விஜய் சேதுபதி ஒரு படத்துக்கான பாடலையும் எழுதியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் ஹிட் ஆகி விட்டால், மக்கள் கவிஞர் விஜய் சேதுபதி என இன்னொரு பட்டமும் மக்கள் செல்வனுக்கு கிடைத்துவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.





