லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த ட்ரெய்லரை தமிழ்நாட்டின் பல திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் வசூலித்து திரையிட்டன. அந்த லிஸ்ட்டில் சென்னை ரோகிணி திரையரங்கமும் ஒன்று. ட்ரெய்லரை பார்ப்பதற்காக அந்த தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தனர்.
ட்ரெய்லரை பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் உணர்ச்சி மிகுதியால் தியேட்டர் இருக்கைகளை சர்வ நாசம் செய்தனர் விஜய் ரசிகர்கள். இதனால் அந்த தியேட்டருக்கு 10 லட்சம் ரூபாய்வரை சேதாரம் ஆகியுள்ளது. ரசிகர்களின் இந்த செயல் பலரிடமிருந்தும் கண்டனத்தை பெற்றட்து. மேலும் விஜய் இதுபோன்ற செயல்களை பார்த்தும் அமைதியாக இருக்கக்கூடாது.
உடனடியாக ரசிகர்களின் சார்பில் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் இனி இப்படி செய்யக்கூடாது என ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் விஜய்யோ எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் தனது 68ஆவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது இந்த மௌனமும் பலத்த கண்டனத்தை பெற்றிருக்கிறது.
குறிப்பாக விஜய்யின் சமீபத்திய மூவ் எல்லாமே அவர் அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞையை அதிகம் காட்டுகிறது. கிட்டத்தட்ட அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. அதற்காகத்தான் லியோ படத்தின் ஆடியோ லான்ச்சையும் ரத்து செய்தார்கள் என்ற ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க விஜய்யோ அரசியலுக்கு வருவதற்கான ஆசையில் மட்டும்தான் இருக்கிறார்.
ஆனால் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க மறுக்கிறார். பாடலில் சிகரெட் பிடிக்கிறார், ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசுகிறார். இப்படியே இருந்தால் கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற விஜய்யின் ஆசை வெறும் ஆசையாக மட்டும்தான் இருகும் என பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ரோகினி தியேட்டர் விஷயத்தை வைத்து விஜய்யை பங்கமாக கலாய்த்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எவ்வளவுதான் கூட்டமாக இருந்தாலும் புஷ் பேக் சேரில் இரண்டு பேர் ஏறி நின்றால் என்ன ஆகும் என்பது தெரியாதா. ஏறி நின்னு மொத்த சீட்டுக்களையும் உடைத்திருக்கிறார்.
இந்த பசங்களை வெச்சிக்குட்டா தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகலாம் என ஆசைப்படுகிறார். ஒரு ட்ரெய்லர் போகிறது. அதை பார்த்து நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே. எதுக்கு இது. ரோகினி தியேட்டர் மட்டுமில்லை மற்ற இடங்களிலும் அவர்களது செயல்பாடு அப்படி இருந்தது. இந்த பசங்கள வெச்சிட்டு விஜய் நல்லா முதலமைச்சர் ஆகிடுவார்” என்றார்.





