சினிமா என்றாலே, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கதைக்கு தேவையான இடங்களில், சில நிமிடங்கள் சண்டை காட்சிகள் இருந்தால் போதும். அதுவும் ஆக்சன் ஹீரோக்கள் படங்களில்தான் அத்தகைய சண்டை காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மற்றபடி, சாதாரண படங்களும் வெள்ளிவிழா கொண்டாடி வருகின்றன.
உதாரணமாக, அந்த கால கருப்பு வெள்ளை படங்களில் படத்தின் இறுதியில் கிளைமேக்ஸில் கண்டிப்பாக சண்டை காட்சியுடன் முடிவடையும். இடையிடையே ஓரிரு சண்டை காட்சிகள் இருக்கும். அதுவும், சில நிமிடங்களே இடம்பெறும். மற்றபடி சண்டை காட்சிகளில் அவ்வளவு வன்முறை இருக்காது. சண்டை இல்லாமலேயே வௌிவந்த படங்களும் நிறைய உண்டு. அவை வெள்ளி விழா படங்களாகவும் இருந்திருக்கின்றன.
ரஜினி, கமல் நடித்த ஆரம்ப காலத்தில் கூட, சண்டை காட்சிகளில் அதிக வன்முறை இருக்காது. ஜெயிலர் படத்தில் வருவது போல, ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றது இல்லை. துப்பாக்கியால் சுடுவது மட்டுமே அன்றைய ஆக்சன் படங்களில் பெரிய விஷயமாக காட்டப்பட்டது.
குடும்ப கதைகள், யதார்த்த படங்களை எடுத்த பாலசந்தர், பாலு மகேந்திரா, விசு, வி சேகர் போன்றவர்களின் படங்களில், சண்டை காட்சிகள் பெரும்பாலும் இருக்காது. அப்படியே இருந்தாலும், அதையும் நகைச்சுவை கலந்து படம் பிடித்து காட்டி, ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பர்.
ஆனால், இன்றைய சினிமாவில் கத்தி, ரத்தம், துப்பாக்கி, வெடிகுண்டு சத்தம் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, கசாப்பு கடைக்குள் சென்று வந்ததை போன்ற ஒரு உணர்வை, இயக்குநர்கள் ஏற்படுத்தி விடுகின்றனர். ஆபாசம், வன்முறை தவிர்த்து காக்கா முட்டை, சித்தா, லவ்டுடே, காந்தாரா, வீட்ல விசேஷம் போன்ற சில படங்கள் வருவது ஆறுதல் அளிக்கிறது.
இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துவரும் படம் கங்குவா. இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 30 நாட்கள் படப்பிடிப்பில், 25 நாட்கள் சண்டை காட்சிகளும், 5 நாட்கள் விடுபட்ட காட்சிகளும் எடுக்கப்படுகிறது. ஸ்டண்டு மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தலைமையில், இந்த சண்டை காட்சிகள் எடுக்கப்படுகிறதாம். இப்படி 25 நாட்கள் சண்டையை படம்பிடித்தால், கங்குவா படத்தில், இரண்டு மணி நேரம் சண்டை காட்சிகளாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹீரோ தவிர்த்து, மற்ற நடிகர், நடிகையர் நடித்த காட்சிகள் திரையில் வருமா எனத் தெரியவில்லை,





