பண்டிகை நாட்களில், புதிய படங்கள் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு அதிக மகிழ்சசி தரும். இதற்கு முக்கிய காரணம், பண்டிகை கால விடுமுறை நாட்களின் நண்பர்களுடன், குடும்பத்தினருடன் சினிமாவுக்கு சென்று வருவது மகிழ்ச்சியான, நிறைவான அனுபவமாக பலருக்கும் இருக்கிறது.
அதுமட்டுமின்றி தீபாவளி, பொங்கல் என்றாலே பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, குடும்பத்துடன் பலரும் சினிமாவுக்கு செல்வதால், சுமாரான படங்களுக்கு கூட அதிகளவில் ரசிகர் கூட்டம் வரும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்பார்த்ததை விட தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கவும் வாய்ப்பு உருவாகிறது.
கடந்த 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தை கணக்கில் வைத்தே ரஜினி, கமல் படங்கள் இயக்கப்பட்டு, சரியாக பொங்கல், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. புத்தாடை, இட்லி கறிக்குழம்பு, நண்பர்கள், குடும்பத்தினருடன் புது ரஜினி படம், அல்லது கமல் படம் என்பதுதான் அன்றைய பண்டிகை நாள் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
இன்று, மாதத்தில் 10 முதல் 25 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பண்டிகை காலத்தில் படம் பார்ப்பது என்ற வரைமுறை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு, எப்போது தங்களது அபிமான நடிகர் படம் ரிலீஸ் ஆனாலும் படம் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். அதனால் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் கூட பண்டிகை நாட்களை குறிவைப்பது இல்லை.
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையன்று சில முக்கிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான், அருண்விஜய் நடிப்பில், இயக்குநர் பாலா இயக்கிய வணங்கான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் ஆகிய படங்கள், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
இந்த படங்கள் காரணமாக, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த சுந்தர் சி யின் அரண்மனை 4 படம், ஜனவரி 26ம் தேதி, குடியரசு தின நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வணங்கான், தங்கலான், லால்சலாம் படங்களுக்கு மத்தியில் அரண்மனை 4 வெளியானால், போதிய கவனத்தை ரசிகர்களிடம் பெறாது என்பதால், இயக்குநர் சுந்தர் சி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுந்தர் சியின் கலகலப்பான படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதனால் பொங்கலுக்கு அவரது அரண்மனை 4 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.





