விஜய் நடித்த லியோ படம், கடந்த 19ம் தேதி வியாழன் அன்று ரிலீஸ் ஆனது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஒரு வார காலத்தில் லியோ படத்தின் மொத்த வசூல், ரூ. 461 கோடி ரூபாய் என, படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இது மற்ற படங்களை காட்டிலும் மிகப்பெரிய வசூல் என்றும் விக்ரம், பொன்னியின் செல்வன், ஜெயிலர் உள்ளிட்ட படங்களின் வசூலை விட அதிகரித்து, லியோ படம் வசூலில் ரெக்கார்டு படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வசூல் நிலவரம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
லியோ படத்தை பொருத்தவரை, ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பை அந்த படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக இடைவேளைக்கு பிறகு படத்தின் கதையோட்டம், ரசிகர்களை குழப்பமடைய செய்துவிட்டது. அதிலும் பிளாஸ்பேக் காட்சியில் வரும் நரபலி, இரட்டையராக அண்ணன் தங்கை போன்ற உடான்ஸ் எல்லாம், அப்பட்டமான சினிமாத்தனமாக இருந்தது, விஜய் ரசிகர்களுக்கே இது பிடிக்கவில்லை.
விஜய் படங்கள் ரிலீஸ் என்பது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் சந்தோஷம் தரும். ஆனால், அதுவும் இந்த முறை ஏமாற்றிவிட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். காரணம். லியோ படம் திரையிட்ட தியேட்டர்களில் 75 முதல் 80 சதவீத வசூல் பங்கு, விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நெருக்கடியான நிபந்தனை தான். இது, பலத்த ஏமாற்றத்தை, அதிருப்தியை தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இதற்கிடையே ஒரு சந்தோஷமான தகவல், லியோ படத்தில் நடித்த விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கிடைத்திருக்கிறது. அது, அமெரிக்காவில் லியோ படம், வசூலில் சாதனை படைத்திருக்கிறது. அதாவது, மொத்தம் 5 மில்லியன் யுஎஸ் டாலர்களை லியோ படம் வசூலித்துள்ளது. நமது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 41 கோடியே 50 லட்சம் ஆகும்.
விஜய் படத்துக்கு முதன்முறையாக மிகப்பெரிய வரவேற்பு அமெரிக்காவில் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் திரையிடப்பட்ட 2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 1, 2 , ஜெயிலர் படங்களை காட்டிலும், லியோ வசூல் மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களில் லியோ ரிலீஸ் செய்ய ரூ. 18 கோடி ரூபாய்க்கு லியோ படத்தயாரிப்பு நிறுவனம் விற்ற நிலையில், 41.50 கோடி ரூபாயை, லியோ வசூலில் கடந்திருக்கிறது. இன்னும் வசூல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.





