நடிகர் விஜய் நடித்த லியோ படம், கடந்த 19ம் தேதி வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரே வாரத்தில், 461 கோடி ரூபாய் வசூல் சாதனையை புரிந்திருக்கிறது. மேலும், அமெரிக்காவில் மட்டும் இந்த படம் 5 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 41.50 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது.
லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் 30ம் தேதி, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பல ஆட்சேபங்களை போலீஸ் தரப்பில் தெரிவித்த நிலையில், இந்த விழா கடைசி நேரத்தில் நடக்காது என அறிவிக்கப்பட்டது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை, கவலையை ஏற்படுத்தியது. அதே போல், விஜய் நடித்த லியோ படத்துக்கு, முதலில் சிறப்பு காட்சிகளே இல்லை எனவும், அதற்கு பிறகு ரசிகர் சிறப்பு காட்சி உட்பட தினமும் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. ஆனால், காலை 9.00 மணி முதல் இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, சென்னை ஐ கோர்ட்டில் படத் தயாரிப்பு தரப்பில் முறையிட்டது. ஆனால், அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிடுவதில் உள்ள சட்ட சிக்கல்கள், நடைமுறை பிரச்னைகளை தமிழக அரசு தெளிவுபடுத்தியது. இதையடுத்து, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்பதையும் கோர்ட்டும் தெளிவுபடுத்தியது. ஆனால், மற்ற கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது.
லியோ படம் சூப்பராக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கூறினாலும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு லியோ பெரிய ஏமாற்றத்தையே தந்தது. என்றாலும் வசூலில் ஒரே வாரத்தில் ரூ. 461 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை லியோ புரிந்துள்ளது. இதையடுத்து வரும் 1ம் தேதி, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் லியோ வெற்றிவிழா கொண்டாட, லியோ பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.
இதற்கான அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லியோ படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்போர் விவரம், பார்வையாளர் எண்ணிக்கை, நேரம், விருந்தினர் வருகை உள்ளிட்ட பல விவரங்கள் போலீஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. லியோ இசை வெளியீட்டு விழாவை போல, கடைசி நேரத்தில் இந்த வெற்றி விழாவுக்கும் போலீசார் அனுமதி மறுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ரசிகர்களும், குழப்பத்தில் படக்குழுவினரும் உள்ளனர்.





