லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமானர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், “காஷ்மீர்ல பிரச்சனை வரும்போது, விஜயகாந்த் மாதிரி யாரோ ஒருத்தர் வருவாங்கன்னு தான் நினைச்சேன். ஆனா இங்க மரியம் ஜார்ஜ் வாராரு. அவருக்கு சூப்பர் இன்ட்ரோடக்ஷன். தியேட்டரே சும்மா அதிர்ந்துச்சு. ஆனா எனக்கு செம சிரிப்பா இருந்துச்சு. தளபதி விஜய் ரசிகர்களுக்கு நான் ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சிருக்கேன்.
நைட் ஒரு மணிக்கு எனக்கு கனடாவில் இருந்து போன் வந்துச்சு. நீங்க எப்படி சார் லியோ ஃப்ளாஷ்பேக்ல பொய் சொல்லலாம்னு என்கிட்ட கேக்குறாங்க. தமிழகத்தோட நாளைய தீர்ப்பு விஜய் சார்தான். நாளைய தீர்ப்புக்கு எல்லாரும் தயாராகுங்கள். விஜய்யோட அன்புத் தம்பிங்க நாட்டை நடத்திட்டு போகணும்” என்று பேசினார்.
தொடர்ந்து மேடையில் தோன்றிய நடிகர் அர்ஜுன், “முன்பெல்லாம் மக்கள் என்னை பார்க்கும் போது ஜெய்ஹிந்த் என்று தான் கூறுவார்கள். இப்போது தெறிக்க என்கிறார்கள். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நான் த்ரிஷாவுடன் லியோவில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால் இரண்டு படத்திலும் அவருக்கும் எனக்குமான சேர்ந்த காட்சிகள் எதுவும் இல்லை. சிவாஜி கணேசனுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு நேரம் தவறாமல் வருவது நடிகர் விஜய்தான்.
காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே விஜய் வந்து விடுவார். இந்திய சினிமாவில் விஜய்க்கு என மிகப் பெரிய பெயர் உள்ளது. எதுவாக இருந்தாலும் கடின உழைப்பை போடும் அவர், மிக சாதாரணமான மனிதர். ஒரு தலைவன் ஆவதற்கு அனைத்து தகுதியும் விஜய்யிடம் இருக்கிறது. விரைவில் அவர் அரசியலுக்கு வருவார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும், அது விஜய்க்கு நிறையவே உள்ளது” என்று பேசி முடித்தார்.
இதன்பிறகு அர்ஜுனிடம் பேசிய தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, முதல்வன் திரைப்பட காட்சியை நினைவூட்டினார். நீங்கள் முதல்வன் திரைப்படத்தில் வருவதைப் போல விஜய் இடம் கேள்வி கேட்க வேண்டும் என்று டிடி கூற அரங்கமே அதிர்ந்தது.
இதன் பிறகு மேடைக்கு விஜய் வர, அவரிடம் விஜய்யாக இருப்பது கஷ்டமா இஷ்டமா அல்லது சுலபமா என்று அர்ஜுன் கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதில் கூறிய தளபதி விஜய், வெளியே இருந்து பார்க்க கஷ்டமா இருக்கும் சார். ஆனா ரொம்ப ஈஸி தான் சார். அதற்கு முக்கிய காரணம் இவங்க தான் சார் இவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அந்த ஒரு நிமிடம் அரங்கமே அதிர, நிகழ்ச்சி களைகட்டியது.





