கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஆரம்பத்தில் குறும்படங்களை எடுத்து வந்த அவர், இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் பேவரட் இயக்குனராக வலம் வந்தார். இதற்கு முக்கிய காரணம் கோமாளி திரைப்படத்தில் அவர் தொட்ட நைட்டீஸ் கிட்ஸ்களின் காலம்தான்.
90களில் இருப்பதற்கும் இப்போது உள்ளதற்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து கொடுத்ததால் கொண்டாடப்பட்டார் பிரதீப். இதன் பிறகு அவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கினார்.
நவீன யுகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்க, காதலர்கள் தங்களுக்குள் அந்த செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் நடக்கும் என்பதை சுவாரஸ்யம் குறையாமல் கூறியிருந்தார் பிரதீப். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் புதுவித அனுபவத்தை கொடுத்ததால், லவ் டுடேவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அனைவரும் திரைப்படத்தை கொண்டாடி மகிழ, 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த திரைப்படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்ட சூழலில், பிரதீப் ரங்க நாதனின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு தவறிப்போன விக்னேஷ் சிவன், பிரதீப்பை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதை சுருக்கி எல்ஐசி ஆக டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. நீண்ட நாட்களாக இது குறித்த தகவல் பேசப்பட்டு வந்த சூழலில், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதலுடன் மொபைல் போன் டெக்னாலஜியை மையப்படுத்தி புதிய கதையை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறாராம். இதனை லியோ படத்தை எடுத்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாம். படத்தில் பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடிக்க, எஸ் ஜே சூர்யா மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்களாம். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





