தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என 45 ஆண்டுகளக கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இப்போதும் அவரது இமேஜ் குறையாமல், தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த ஜெயிலர் படம், சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரூ. 525 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.
இப்போது தனது அடுத்த படமான ரஜினி 170 படத்தில், தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படமும் இப்போதே எதிர்பார்ப்பை அதிகரிக்க துவங்கி விட்டது. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வில்லனாகவும், சிவகார்த்திகேயன் முக்கிய கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
ரஜினிகாந்தை பொருத்த வரை, மிகவும் கலகலப்பான மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்டிலும், பொது நிகழ்ச்சியிலும் தனது நண்பர்கள், சினிமா பிரபலங்களிடம் ஜாலியாக பேசுவார். நட்பாக பழகுவார். தனக்கான உயரம் தெரிந்தும், அதற்கான பந்தா எதுவுமின்றி, அலட்டல் காட்டாமல் மிக யதார்த்தமாக இருப்பதால்தான் அவரை எளிமையான மனிதராக பலரும் பாராட்டுகின்றனர்.
சமீபத்தில் அவர் செய்த கலாட்டா ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படம் எடுக்கப்பட்ட போது நடந்த சம்பவம் இது. இந்த படத்தில் ஐஸ்வர்யாராஜ் ஹீரோயினாக நடித்தார். எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் பணிபுரிந்தார்.
அப்போது ஒருநாள், மனோஜ் குமாரை ஐஸ்வர்யா ராயிடம், ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் இவர் என்று கூறிய ரஜினி, இவருடைய அப்பா, நான் 16 வயதினிலே படத்தில் நடித்த போது, சம்பள பாக்கி 100 ரூபாய் தர வேண்டும். இன்று வரை அவர் அந்த சம்பள பாக்கியை தரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஐஸ்வர்யா ராய், மனோஜ்குமார், இயக்குநர் ஷங்கர் உள்பட அங்கிருந்த பலரும் வாய்விட்டு சிரித்திருக்கின்றனர்.





