நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பெற்ற சிறந்த நடிகர். துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என அழைக்கப்பட்ட விஜயகாந்த், பிற்காலத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த பிறகு கேப்டன் என அழைக்கப்பட்டார். ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த்.
அரசியல் ஆர்வம் மிகுந்த விஜயகாந்த், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் (தேமுதிக) என்ற கட்சியை துவக்கினார். அரசியல் கட்சி துவங்கி, முதலில் சந்தித்த சட்டசபை தேர்தலிலேயே கணிசமான ஓட்டுகளை பெற்று, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடுத்த சட்டசபை தேர்தலில், திமுகவை விட அதிக தொகுதிகளை வென்று, ஜெயலலிதா ஆட்சியில், எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் சட்டசபையில் அமர்ந்தார். இதே நிலையில் அவர் இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பிறகு, தமிழக முதல்வராக நிச்சயம் விஜயகாந்த் வந்திருப்பார் என அரசியல் விமர்சகர்கள் தரப்பில் பேசப்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் முழு ஓய்வில் விஜயகாந்த் இருந்து வருகிறார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மைத்துனர் சுதீஷ் (பிரேமலதாவின் தம்பி) ஆகியோர்தான் தேமுதிக கட்சி பணிகளை கவனித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, விஜயகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவரை நேரில் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கம்பீரத்துக்கே உரிய விஜயகாந்த், ஒரு நோயாளியாக முடங்கி இருப்பதை பார்த்த அவர்களது ரசிகர்கள் மிகவும் மனம் சோர்ந்து போயினர்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாலை, திடீர் உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் விஜயகாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு 3 நாட்களாக செயற்கை சுவாசம் தந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கேப்டனின் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். ஆனால், மூச்சு பிரச்னை சரியானதும், அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என, அந்த மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.





