தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சி தலைவராக உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் திமுக குறித்தும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக குறித்தும் கடும் விமர்சனங்களை செய்து வருகிறார். தனது அரசியல் விரோதி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் மேடைகளில் தொடர்ந்து நடிகர் விஜய் ஆவேசமாக பேசி வருகிறார்.
இப்படி தவெக பொதுக்கூட்ட மேடைகளில் நடிகர் விஜய் பாஜக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைப்பது பாஜகவினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் பாஜக பக்கம் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. அத்துடன் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக குறித்தும் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கிறார்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி கேட்ட போது, முதலில் அவர் திரிஷா வீட்டை விட்டு வெளியே வரட்டும். பிறகு அவரை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சி தலைவர் விஜய் குறித்த விமர்சனத்தில் சம்பந்தமே இல்லாமல் நடிகை திரிஷா குறித்து அவர் பேசியது பாஜகவினர் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவில், என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல. அருவருக்கத்தக்க வகையிலும் முறையற்ற வகையிலும் அரசியல் கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் என்னைப் பற்றி பேசியுள்ளார்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. கட்சியில் சேரும் எண்ணமும் எனக்கு இல்லை. எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் என் பெயரை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று நடிகை திரிஷா அந்த பதிவின் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை. என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தவறி வந்த வார்த்தைகள். அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.





