நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசுகையில், திரிஷாவுடன் நடிப்பதால், பெட்ரூம் சீன் வரும். ரோஜா, குஷ்புவை தூக்கி கட்டிலில் போட்டது போல, இதிலும் நடிக்கலாம் என இருந்தேன். ஆனால் காஷ்மீரில் திரிஷாவை கண்ணில் கூட டைரக்டர் காட்டவில்லை என்று பேசியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவிக்க, இந்த விவகாரம் பயங்கர டிரண்டிங் ஆகி விட்டது.
இதற்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி, தென்னிந்திய நடிகர் சங்கம் என பலதரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. பலரும் வன்மையாக தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இந்த பிரச்னைக்கு விளக்கம் மட்டுமே அளித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.
ஆனால், இதே போன்ற ஒரு தொனியில், இதே விதமாக தான் லியோ சக்சஸ் மீட்டிலும் மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார். லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்க போகிறேன் என சந்தோஷப்பட்டேன். ஆனால், திரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என்றுதான் மன்சூர் அலிகான் அப்போதும் பேசி இருக்கிறார். அப்போது அதை ரசித்த திரிஷா, இப்போது அதே பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த விவகாரத்தில், 20 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள திரிஷாவுக்கு அவருடன் நடித்த சக நடிகர், நடிகையர் பலரும் ஆதரவாக நின்று, மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், யாரும் அப்படி உணர்வுபூர்வமாக முன்வரவில்லை. குறிப்பாக ரஜினி, விஜய், கமல், அஜீத் போன்றவர்கள் இதை கண்டுகொள்ளவில்லையே என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
இதுகுறித்த நேர்காணல் ஒன்றில் பேசிய பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகையில், மன்சூர் அலிகான் பேசிய அதே விதத்தில்தான், ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் பேசினார். ஜெயிலர் படத்தில் தமன்னா நடிப்பதால், நானும் ஒரு இதுவாக வந்தேன். ஆனால், கடைசியில் அவருடன் என்னை சரியாக பேசக்கூட விடவில்லை. டான்ஸ் காட்சியிலும் ஒரு மூவ்மென்ட் அவருடனும், மற்றொரு மூவ்மென்ட் அவர் இல்லாமலும் ஆடினேன் எனக் கூறியிருந்தார்.
இதுவும் கூட ஒருவித இச்சையின் வெளிப்பாடுதான். இயக்குநர், ஹீரோக்களை புகழ்வது போல, விழா மேடைகளில் நடிகைகளை யாரும் திறமையை புகழ்வதில்லை. அவர்களது அழகை தான் புகழ்கின்றனர். ஆர்யா, விஷால் கூட சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனனை உட்கார வைத்துக்கொண்டு அவரது அழகை வர்ணித்து பேசிக்கொண்டு இருந்தனர், என கூறியிருக்கிறார் பிஸ்மி.





