கடந்த இரண்டு தினங்களாக பரபரப்பாக பேசப்படும் சம்பவம், 23 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2001ம் ஆண்டில் பிக்பாஸ் போட்டியாளர் விசித்ரா நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த அந்த சம்பவம். அவர் தன் மனதில் உள்ள துயரத்தை சொல்ல, அது இப்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது.
கேரளாவில், 2001ம் ஆண்டில் மலம்புழாவில் நடந்தது இது. தெலுங்கு பட ஷூட்டிங்கில் நடிக்க போன விசித்ராவை, நைட் ரூமுக்கு வா என அழைத்திருக்கிறார் அந்த பிரபல ஹீரோ. விசித்ரா போகாததால், அவர் தங்கியிருந்த அறைக்கதவை இரவில் தட்டி, தூங்கவிடாமல் பயமுறுத்தி டார்ச்சர் செய்திருக்கிறது ஒரு கும்பல்.
தொடர்ந்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் உடல் பாகங்களில் கண்டபடி சில நபர்கள் கைவைக்க, அதுகுறித்து விசித்ரா அங்கிருந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம் சொல்ல, அவர் விசித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். அதன்பிறகுதான், இந்த சினிமா துறையே வேண்டாம் என விலகியிருக்கிறார் விசித்ரா. இந்த சம்பவத்தில் அந்த ஹீரோ நடிகர், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, படம் பலேவடிவு, ஸ்டண்ட் மாஸ்டர் ஏ விஜய் எனவும் தகவல் பரவி விட்டது.
இதுகுறித்து விசித்ராவின் கணவர் ஷாஜி நேர்காணல் ஒன்றில் கூறுகையில், அந்த சம்பவம் நடந்த ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக தான் நான் பணிபுரிந்தேன். விசித்ராவை அவர்களிடம் இருந்து காப்பாற்ற, அன்றிரவு ஓட்டலில், 10 அறைகளில் மாற்றி மாற்றி தங்க வைத்து அவரை பாதுகாத்தேன்.
அந்த நடிகரின் ஆட்கள் என்னையும் மிரட்டினார்கள். உனக்கெதுக்கு வேண்டாத வேலை என்றனர். என் ஓட்டலில் தங்கியிருப்பவருக்கு, நான்தான் பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறினேன். இப்போதும் கூட அந்த நடிகர் யார் என்று கூறுவதால் பிரச்னைகள் வரும் வாய்ப்புள்ளது, விசித்ராவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.
அந்த சம்பவத்தின் போது நடிகர் சங்கத்தில் புகார் செய்தும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிரச்னையை பெரிது பண்ணாமல், அப்படியே விட்டுவிடுங்கள் என, விசித்ராவுக்குதான் அறிவுறுத்தினர். அதன்பிறகு அவர் சினிமாவை விட்டே விலகிவிட்டார். இதுபற்றி திருமணத்துக்கு பிறகு, அவரது மனம் காயம்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் அதிகமாக பேசிக்கொண்டது கூட இல்லை, என்று அந்த நேர்காணலில் விசித்ராவின் கணவர் ஷாஜி கூறியிருக்கிறார்.





