கோலிவுட்டில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான அவர் காக்கா, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு, என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
கௌதமின் இயக்கம் என்றாலே அந்தப் படம் பக்கா ஸ்டைலிஷாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் கருத்து. அதேபோல் போலீஸ் ஸ்டோரி எடுப்பதிலும் மனிதர் செம கில்லாடி என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இடையில் அவர் கடன் பிரச்னையில் சிக்கினார். அதேபோல் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தையும் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கினார்.
அதில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், விநாயகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஆனால் படத்துக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டதால் படம் ரிலீஸாகாமல் இத்தனை வருடங்கள் கிடப்பில் இருந்தது. ஆனாலும் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்ற முடிவில் மீண்டும் அந்தப் படத்தின் பணிகளில் இறங்கி படத்தை ரிலீஸுக்கும் தயார் செய்துவிட்டார்.
அதன்படி கடந்த 24ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ரிலீஸுக்கு முதல் நாள் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் கௌதம் மேனனுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றது. அதாவது, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்குவதாக 2 கோடி ரூபாய் கௌதம் மேனன் பணம் வாங்கினார். ஆனால் அவர் படத்தை இயக்கவில்லை. எனவே பணத்தை தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 24ஆம் தேதி காலைக்குள் 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வழங்க வேண்டும். இல்லையென்றால் துருவ நட்சச்த்திரம் படம் ரிலீஸாக தடை என உத்தரவிட்டிருந்தது. ஆனால் கௌதமால் அந்தப் பணத்தை கொடுக்க முடியவில்லை. எனவே படத்தின் ரிலீஸும் தள்ளிப்போனது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செவ்வாய் அல்லது புதன் கிழமைக்குள் கொடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் கௌதம் மேனன் உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தை 30ஆம் தேதி வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் இந்த முறை மிஸ் ஆகாது என்றும் கோலிவுட்டில் தகவல் பரவிவருகிறது.





