சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த முறை 21 வது சர்வதேச திரைப்பட விழா, இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் அமைப்புடன் இணைந்து தமிழக அரசு நடத்துகிறது. வரும் 14ஆம் தேதியிலிருந்து, 21 ஆம் தேதி வரை இந்த திருவிழா நடக்கும் என்றும், இதற்காக 57 நாடுகளில் இருந்து 126 திரைப்படங்கள் திரையிடப்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் திரையுலகம் சார்பில் 12 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அதில் முதலாவதாக நாம் பார்க்கப் போகும் திரைப்படம் அநீதி. வெயில், அங்காடித்தெரு திரைப்படங்களை இயக்கிய வசந்த பாலன்தான் இதன் இயக்குனர். அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படத்தைப் பார்த்து அனைவரும் காளிதாஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.
அடுத்ததாக அயோத்தி திரைப்படமும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. வெற்றி திரைப்படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சசிகுமாருக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் தான் அயோத்தி. விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பு பெற்றிருந்த இந்த திரைப்படத்தை மந்திரமூர்த்தி என்பவர் எடுத்திருந்தார். இந்து – இஸ்லாமிய மதத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படமும், சென்னை சர்வதேச திரைப்படம் விழாவில் இருக்கிறது. நாற்காலி அரசியல், அதற்குப் பின்னணியில் இருக்கும் சாதிய பாகுபாடு என அத்தனை விஷயங்களையும் துணிச்சலாக சொல்லி இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். படத்தின் இரண்டாம் பாதி அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும், படத்தில் இயக்குனர் எடுத்த கன்டென்ட் வெயிட்டாக இருந்ததால் மாமன்னனை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
இந்த வருடம் வெளியாகி யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஹிட் அடித்த போர் தொழில் திரைப்படமும், மீண்டும் திரையிடப்படுகிறது. நகரில் பெண்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட, அந்த வழக்கை அனுபவிக்க காவல்துறை அதிகாரி சரத்குமாரும், புதிதாக வேலைக்கு சேர்ந்த அசோக் செல்வமும் விசாரித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வரி கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. நல்ல விமர்சனத்தை பெற்றதால், போர் தொழில் வசூல் சாதனை படைத்தது.
இதுபோக வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இருக்கிறது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை அவர் எடுத்து வருகிறார். தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, விக்ரம் சுகுமாரனின் ராவணக்கோட்டம், பிரபு சாலமனின் செம்பி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளன. பிவிஆர், சத்யம், ஐநாக்ஸ், சாந்தம் திரையரங்குகளில் இந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.





