மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று திரிஷியம் 3 படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் 2 பாகங்கள் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில் 3ம் பாகம் தற்போது ரிலீஸாகி உள்ளது. இந்த மலையாள படத்தின் முதல் பாகம்தான் தமிழில் கமல் – கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற டைட்டிலில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரிஷியம் 3 படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த படத்தின் முதல் பாகத்தில் கேபிள் ஆபரேட்டராக ஜார்ஜ் குட்டி நிம்மதியாக வாழ்ந்து வருபவர். தனது குடும்பத்திற்கு வந்த பிரச்சனையை சமாளிக்க தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலையை மறைத்து குடும்பத்தை காப்பாற்ற தனது சினிமா அறிவை பயன்படுத்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
திரிஷியம் 2வது பாகத்தில் இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் மறுவிசாரணை செய்யப்படலாம். அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பார். அவை சுவாரசியமாக இருந்தது. இப்போது வெளியான 3வது பாகத்தில் பெரிய பணக்காரராக மாறும் ஜார்ஜ் குட்டி தான் எழுதிய கதையை படமாக தயாரிக்கிறார்.
தனது மகள் வளர்ந்து விட்டதால் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஒவ்வொரு வரனும் தட்டி தட்டி போய்க் கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை தேடி கண்டுபிடிக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதுதான் கதை. படத்தின் முதல் இரண்டு மணி நேரம் பொங்கல் சாப்பிட்டது போல இருந்தது. கடைசி அரை மணி நேரம் படம் நன்றாக உள்ளது. அதற்கு காரணம் தனக்கு வரும் பிரச்சனைகள் என்ன, யார் காரணம் என்று தேடி தான் செல்கிறாரே தவிர எதிர்வினை ஆற்றாமல் இருக்கிறார்.
பிரச்னை வந்த பின்புதான் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார். அதுவும் கடைசி அரை மணி நேரம்தான் உள்ளது. பெரிய அளவில் சுவாரஸ்யமாகவும் இல்லை. மறுபடியும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்றால் ஜார்ஜ் குட்டிக்கு எதிராக சரியான ஆதாரம் தேவை. அதற்கான ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் என்னவென்றால் ஜார்ஜ் குட்டி தொடர்பான ஆட்களை சந்திக்க செல்லும்போது அந்த தகவல் உடனே ஜார்ஜ் குட்டிக்கும் தெரிந்து விடுகிறது. இதனால் சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளது.
இந்த படத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முந்தைய பாகங்களை பார்த்திருக்க வேண்டும். முந்தைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பாகம் ஏமாற்றமான படமாக தான் இருக்கிறது. அதுவும் 4ம் பாகத்திற்கு லீடு கொடுத்துள்ளனர். சரக்கு முடிந்துவிட்டதால் இத்துடன் கடையை மூடிக் கொள்வது நல்லது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்கச் சென்றால் ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வை கொடுக்கும் என்று என்று ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.





