நடிகர் சூரி இப்போது மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இப்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் 20 நாட்கள் ஷெட்யூலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
மண்டாடி படத்துக்கு பிறகு நடிகர் சூரி இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். இவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அயலான் படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்ட நிலையில் இப்போது நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்க அவர் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் கதை திரைக்கதை கதைக்களம் காரணமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் கதாநாயகன் சூரியிடம் பேசிய தயாரிப்பு நிறுவனம், படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது. அதனால் படத்தின் பிரமாண்ட காட்சிகளையும் படப்பிடிப்பு சார்ந்த செலவுகளையும் குறையுங்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த சூழலில் பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நடிகர் சூரியை அணுகியுள்ளது.
அந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் சூரியிடம் கால்ஷீட் கேட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூரியின் சம்பளம் ரூ. 15 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரி இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வாங்கி வரும் நிலையில் இப்படி இரட்டிப்பு சம்பளமாக தர மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் ஏஜிஎஸ் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிய நடிகர் சூரி, உங்கள் நிறுவனத்தில் அடுத்த படம் நடிக்கிறேன் என்று சமாதானம் பேசிவிட்டு, இயக்குனர் ரவிக்குமாரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கோர்த்து விட்டிருக்கிறார். அதனால் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பதிலாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை ரவிக்குமார் இயக்கும் நிலையில் அவரது இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார்.





