அண்மையில் ரவி மோகன் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தன. அகிலன், இறைவன், சைரன், பிரதர் என அவருக்கு வரிசையாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே கல்லா கட்டவில்லை. நித்யா மேனன் உடன் அவர் இணைந்து நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் மட்டும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இப்படியான சூழலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன். இதில் அவர் நடித்திருக்கும் ஜீனி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. மிஷ்கினின் உதவியாளர் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பேண்டஸி கதையாக எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. முதல்முறையாக அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தை எடுத்திருப்பது, நிச்சயம் நேர்மறையான விமர்சனத்தையே தரும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இதுபோக கராத்தே பாபு திரைப்படமும், ரவி மோகனின் குட் லிஸ்டில் உள்ளது. டாடா திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இதனை இயக்கியுள்ளார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசரே பெரும் வரவேற்பு பெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினராக வரும் ரவி மோகன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் ரவி மோகன் அடுத்ததாக, தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Bro code என பெயரிடப்பட்டிருக்கும் படத்தை கார்த்திக் யோகி இயக்க, ரவி மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது போக மூன்று கதாநாயகிகளும் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு திரைப்படத்தை, ரவி மோகனே தயாரித்து இயக்குகிறார். யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அண்ட் ஆர்டினரி மேன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றன.





