ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து பல நாடுகளில் இசை கச்சேரி நடத்திவருகிறார். அந்தவகையில் திரைத்துறைக்குள் நுழைந்து 30 வருடங்களை நிறைவு செய்ததன் காரணமாக மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி நடத்த திட்டமிட்டார். ஆனால் அன்றைய தினம் பெய்த மழையின் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதிதிக்கு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பத்தாம் தேதி நிகழ்ச்சிக்கு மேலும் புதிய டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அளவுக்கதிகமான கூட்டம் அலைமோதியது. எனவே தள்ளு முள்ளு, ரசிகர்களுக்கு காயம் என பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தேறின. இதுகுறித்து காவல் துறையினரும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இவ்வளவு வருடங்கள் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ரஹ்மான் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டனர். அதேபோல் ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே பலி ஆடு ஆகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ரஹ்மானின் விளக்கம் போதிய திருப்தியை தரவில்லை என்று தொடர்ந்து அவர் மீது விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர். அதேசமயம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா இந்த விஷயம் குறித்து கொதித்தெழுந்திருக்கிறார். அவர் கூறுகையில், “எங்கள் அப்பா என்னவோ மிகப்பெரிய ஊழல்வாதிபோல் செய்திகள் போடுகிறார்கள். சோஷியல் மீடியாவில் திட்டுகிறார்கள். அவர் தமிழ்நாட்டுக்கும், ரசிகர்களுக்கும் எவ்வளவோ உதவிகளை இத்தனை வருடங்களாக செய்துகொண்டுவருகிறார்.
🙏🙏🙏 pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
2015ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டு நெஞ்சே எழு நிகழ்ச்சியை சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தினார். கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2018ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவி செய்தவர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவி செய்தவர். திரைத்துறையில் இருக்கும் லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இசை நிகழ்ச்சி நடத்தியவர்” என குறிப்பிட்டிருக்கிறார்.





