இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தவெக குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக 1.70 கோடி மக்கள்தான் தவெக கட்சியை ஆதரித்தார்கள். 4.87 கோடி மக்களில் மீதி மக்கள் தவெக கட்சியை ஆதரிக்காமல் நிராகரித்தார்கள். இப்போது திமுக தயவில் தான் தவெக கட்சிக்கு ஆதரவு கிடைத்து ஆட்சி நடக்கிறது என்று உதயநிதி பேசினார்.
அதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் தமிழக முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது, நம் தமிழக வெற்றிக் கழகத்தை விட 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர்.
அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான்.அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர்.
இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது. எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம் என்று அந்த எக்ஸ் பதிவில் தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





