ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தினார். அதன் பிறகு குறிப்பாக 90களில் தமிழ் சினிமாவில் இசைப்புயல் பலமாகவே வீசியது. அவரது இசை ஏதோ ஒரு புதுமையை சுமந்து வந்ததால் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினார். ஏ.ஆர்.ரஹ்மானின் மெட்டெல்லான் ஹிட்டடித்ததன் காரணமாக வெகு சீக்கிரத்திலேயே இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.
தமிழைத் தொடர்ந்து பாலிவுட் சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். பிறகு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததால் அவருக்கு கோல்டன் குளோப், கிராமி, ஆஸ்கர் என வரிசையாக சர்வதேச அளவிலான விருதுகள் கிடைத்தன. எனவே உலக அளவிலும் புகழடைந்துவிட்டார் ரஹ்மான். குறிப்பாக ஆஸ்கர் மேடையில் அவரது பேச்சு பலரால் ரசிக்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடைசியாக தமிழில் மாமன்னன் படம் வந்தது. அயலான் படம் தீபாவளிக்கு வரவிருக்கிறது. பார்ப்பதற்கு எப்போதும் சாந்தமாக தோன்றும் ரஹ்மான் தக் பதில்கள் கொடுப்பதில் கைதேர்ந்தவர். அவர் பல முறை தனது மனதில் பட்டதை பேசியிருக்கிறார். ஒரு மேடையில் அய்யோ ஹிந்தியா என கூறி சென்ற வீடியோ இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருப்பது.
அதேபோல் மற்றொரு மேடையில் தனது மனைவி பேச ஆரம்பிக்கும்போது ஹிந்தி வேண்டாம் ப்ளீஸ் தமிழில் பேசுங்க என கூறியதும் வைரலானது. அதேசமயம் அவரது பேச்சை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். உதாரணமாக சாதிய அடக்குமுறை குறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஹ்மானுக்கு சாதிய அடக்குமுறை குறித்த புரிதலே இல்லை என்று நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இஸ்லாமிய மதத்துக்கு மாறும்போது எந்தவிதமான சமூக அழுத்தத்தையும் நான் உணரவில்லை. இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் மற்றும் பரந்த தன்மை உடையவர்கள்.
வாழு, வாழ விடு என்ற கோட்பாட்டை பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள். ஆனால், அரசியல் சூழலால் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான சூழ்ல நிலவுவதை உணர்கிறேன்” என கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சை பார்த்த ரசிகர்கள், நாட்டில் சகிப்புத்தன்மையும், மதசார்பின்மை குறைந்துபோனதையும்தான் ரஹ்மான் சுட்டிக்காட்டுகிறார். அதுவும் பாஜகவைத்தான் மறைமுகமாக அவர் கூறுகிறார் என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





