கடந்த வாரத்தில் வெளியான படம் ஆடுஜீவிதம். மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்தை பிளஸ்ஸி டைரக்ட் செய்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞன் அங்கு கொத்தடிமையாகி ஆடு மேய்ப்பதுதான் இந்த படத்தின் கதை. இது ஆடுஜீவிதம் என்ற ஒரு நாவலை அடிப்படையாக கொண்ட படம். ஏஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
பிருத்விராஜ், மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். கேவி ஆனந்த் இ்யக்கிய கனா கண்டேன் என்ற படத்தில் ஸ்ரீகாந்த், கோபிகா நாயகன், நாயகியாக நடித்திருப்பர். இந்த படத்தில்தான் பிருத்விராஜ் வில்லனாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே தன் செழிப்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் பிருத்விராஜ்.
தொடர்ந்து மொழி, கண்ணாமூச்சி ஏனடா, பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி, அபியும் நானும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பரிச்சயமான நடிகர். இதில் மொழி படத்தில் ஜோதிகாவின் காதலான தன் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தி பல காட்சிகளில் நடித்து அசத்தி இருப்பார்.
ஆடுஜீவிதம் படம் 16 ஆண்டு கால உழைப்பு என சொல்லப்படும் நிலையில், அந்த உழைப்புக்கான பலனை, படக்குழுவினர் ஒரே வாரத்தில் பெற்றுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த படம் கடந்த வாரம் வெள்ளியன்று அதாவது மார்ச் 29ம் தேதி வெளியானது. இப்போது 9 வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படம், 150 கோடி ரூபாயை கடந்து, வசூலில் சாதனை படைத்தது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 5 கோடி மட்டும்தான். அதே போல் பிரமயுகம், பிரேமலு என தொடர்ந்து மலையாள படங்கள், தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, அமோக ஆதரவை பெற்று வருகின்றன. ஆனால் 3 மாதங்கள் கடந்தும், தமிழில் ஒரு படம் கூட பெயர் சொல்லும் அளவுக்கு, ரசிகர்கள் மனதை கவரவில்லை.
மலையாள படங்களின் வெற்றிப் பட வரிசையில், ஆடுஜீவிதம் படம் இணைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இன்னும் அடுத்தடுத்து வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஆடுஜீவிதம் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்த 2018 படம், ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் ஆடுஜீவிதம் ஆஸ்கர் விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.





