தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் அவர் அரசியல் களத்தில் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் அவர் நடித்த ஜனநாயகன் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது சிக்மா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தாண்டு கோடை காலத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சிக்மா படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தன் அப்பா விஜயை போல சினிமாவில் நடிகராகாமல் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல இயக்குனராக ஆசைப்பட்டார். அதனால் ஆரம்பத்தில் இருந்தே சினிமா இயக்கம் சம்பந்தமான படிப்பில் அவர் ஆர்வம் காட்டினார். வெளிநாட்டில் சில ஆண்டுகள் டைரக்சன் தொடர்பான துறையில் பயிற்சி பெற்றார். அவர் சில குறும்படங்களையும் டைரக்ட் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் முதல் படமாக சிக்மா என்ற படத்தை இயக்கி ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏற்கனவே நடிகர் விஜயுடன் வேட்டைக்காரன் என்ற படத்தில் ஜேசன் சஞ்சய் நான் அடிச்ச தாங்க மாட்டே என்ற பாடல் காட்சியில் நடித்திருந்தார். சிறுவனாக அந்த பாடல் காட்சியில் விஜயுடன் இணைந்து சஞ்சய் நடனமாடி இருந்தார்.
இப்போது அவர் இயக்கி வரும் சிக்மா படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு அவர் நடனம் ஆட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடும் ஒரு ஐட்டம் பாடலில் சில காட்சிகளில் ஜேசன் சஞ்சயும் இணைந்து அவர்களுடன் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர் வரும் நாட்களில் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நிச்சயமாக சஞ்சய் சினிமாவில் நடிக்க வந்தால் அவரது அப்பா விஜய் போலவே தனக்கான ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்று தளபதி ரசிகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் இயக்கம், நடிப்பு என்று இரண்டு துறைகளிலுமே சிலர் சினிமாவில் சாதித்து வருவதால் ஜேசன் சஞ்சயும் தனது வெற்றி முத்திரையை தமிழ் சினிமாவில் பதிப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக கூறி வருகின்றனர்.





