தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் காட்டும் கேங்ஸ்டர் கதைகளே அதிகளவில் படமாக்கப்படுகின்றன. அதாவது ஹீரோவை பெரிய கொம்பன்களாக காட்டும் படங்களை உருவாக்குவதுதான் இன்றைய இயக்குனர்களின் தலையாய கடமையாக இருக்கிறது. அதாவது கதைக்கான கேரக்டர்களை உருவாக்காமல் கேரக்டருக்கான பில்டப் கதைகளை உருவாக்கும் படைப்பாளிகளாக மாறி விட்டனர்.
உதாரணமாக ரஜினி, விஜய், அஜீத், தனுஷ் போன்றவர்களிடம் நல்ல நடிப்பாற்றல் இருக்கிறது. வித்யாசமான கதைகளில் அவர்களால் நடிக்க முடியும். அப்படி அவர்கள் சில படங்களிலும் நடித்திருக்கின்றனர். உதாரணமாக ரஜினி நடித்த படிக்காதவன், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் ரஜினிகாந்த் நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருப்பார்.
விஜய் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற படங்களிலும் அவரது நடிப்பாற்றல் சிறப்பாக இருக்கும். அதே போல் அஜீத் நடிப்பில் சிட்டிசன், வில்லன், காதல் கோட்டை போன்ற படங்களில் அவர் நல்ல நடிகராக தன்னை காட்டியிருப்பார். ஆனால் அவர்களுக்கு மீண்டும் அதுபோன்ற நடிக்கிற கதைகளை தர இயக்குனர்கள் தயாராக இல்லை.
அதாவது மாஸ் காட்டுகிறேன், கெத்து காட்டுகிறேன் பேர்வழி என அவர்களாக ஹாலிவுட், பாலிவுட் படங்களில் இருந்து கதைகளை உருவி எடுத்து, காப்பியடித்து அந்த கதைகளில் பில்டப் ஹீரோயிசத்தை உருவாக்கி, தமிழ் சினிமா செல்ல வேண்டிய பாதையை மாற்றியமைத்து விட்டனர். அதனால் தமிழ் படங்களை கடந்து, சமீபமாக மலையாள படங்கள் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் படம், உலகளவில் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. குணா குகையில் தவறிவிழுந்த தன் நண்பனை, உடன் வந்த நண்பர்களே போராடி காப்பாற்றுகிற இந்த கதையை தான் மக்கள் கொண்டாடி ஜெயிக்க வைத்துள்ளனர். அதே போல் பிரேமலு, பிரம்மயுகம் போன்ற படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன.
இப்போது நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்துக்கும் அமோக வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. வேலை தேடி வெளிநாடு செல்லும் பிருத்விராஜ், கொத்தடிமையாக சிக்கிக் கொாள்வதுதான் இந்த படத்தின் மையக்கரு. பென்யமின் என்பவர் எழுதி நாவல்தான் இந்த கதை. டைரக்டர் பிளஸ்ஸி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அமலாபால் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 15 கோடியை கடந்துள்ளது. படத்துக்கு வரவேற்பு அமோகமாக இருப்பதால் வசூல் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.





