தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ மான் கராத்தே காக்கி சட்டை வேலைக்காரன் டாக்டர் போன்ற படங்களின் அபார வெற்றியால் அவர் முன்னணி ஹீரோவாக மாறினார்.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது படமாக பராசக்தி படம் வெளியானது. மொழிப்போர் தியாகி ராசேந்திரன் பயோபிக் படமாக இது இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை பொருத்த வரை நடிகர் ரவி மோகன் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் படங்களையும் தயாரிக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்கள் ஹீரோக்களின் படங்களையும் அவர் தயாரிக்கிறார்.
அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி என்ற மூதாட்டி கேரக்டரில் நடித்துள்ள படம் தாய்கிழவி. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்தான். அந்த படத்தை பார்த்த அவர் நெகிழ்ந்து போய்விட்டார். உடனடியாக அந்த படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு தனது அடுத்த பட வாய்ப்பை தந்து விட்டார்.
அதனால் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தான் நடிக்கிறார். வருகிற 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாள். அந்த விசேஷ நாளில் இந்த படத்தின் டீசரை வெளியிட எஸ்கே முடிவு செய்திருக்கிறார். இதற்காக 3 நாட்களுக்கு பிரமோ ஷூட்டிங் மதுரையில் நடக்கிறது.
மதுரையில் நேற்று துவங்கிய இந்த பிரமோ ஷூட்டிங் தாய்கிழவி படம் ஷூட்டிங் நடந்த அதே இடங்களில் லைவ் லொகேஷனில் நடத்தப்படுகிறது. இது முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் வில்லேஜ் சப்ஜெக்ட் படமாகும். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் அல்லது ஜீவி பிரகாஷ் குமார் இருவரில் ஒருவர் இசையமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.





